எடப்பாடி பழனிச்சாமி தலைமியின் கீழ் இப்போது அதிமுக செயல்பட்டு வருகிறது. போன ஆட்சியில் கட்சி, ஆட்சி என இரண்டையும் கையில் வைத்திருந்தார் பழனிச்சாமி. தர்ம யுத்தம் நடத்திகொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வத்தை பழனிச்சாமியுடன் சேர்த்து வைத்து அதிமுகவில் இரட்டை தலைமையை உருவாக்கியது பாஜக. இரண்டு பேருமே பாஜகவுக்கு விஸ்வாசமாகவே இருந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் செய்த விஷயங்கள் பழனிச்சாமிக்கு பிடிக்காமல் போக அவரை கட்சியிலிருந்தே தூக்கிவிட்டார். இப்போது தனியாக செயல்பட்டு வருகிறார் ஓபிஎஸ்.
ஒருபக்கம், இனி எந்த நிலையிலும் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் கட்சிக்குள் விடக்கூடாது என்பதில் பழனிச்சாமி உறுதியாக இருக்கிறார். மேலும், 2 வருடங்களுக்கு முன்பே பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியது அதிமுக. ஆனால், திமுகவை வீழ்த்த பாஜகவுடன் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அமித்ஷாவின் நோக்கமாக இருக்கிறது. சமீபத்தில் பழனிச்சாமி டெல்லி சென்றபோது அவரிடம் அமித்ஷா இதைத்தான் கூறியிருக்கிறார். ஆனால், பழனிச்சாமி பிடிகொடுக்கவில்லை.

எனவே, பழனிச்சாமி தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சிலரை வைத்து பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுக்க நினைக்கிறார் அமித்ஷா. ஏற்கனவே அதிமுகவில் தனியாக செயல்பட்டு வரும் செங்கோட்டையன் இதற்கான வேலைகளை செய்ய துவங்கிவிட்டார்.. இதுவரை 2 முறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன். பழனிச்சாமி மீது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களை ஒருங்கிணைத்து மேலும் பல எம்.எல்.ஏக்களையும் தன் பக்கம் இழுத்து அதிமுக தலைமையை நாம் கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் செங்கோட்டையனுக்கு இருக்கிறது. இப்போது இது வேண்டாம். பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுத்து அவரை ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வரவேண்டும் என்பதே அமிஷாவின் நோக்கமாக இருக்கிறது.
அதிமுக, பாஜக, சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் போன்ற எல்லோரையும் ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க பழனிச்சாமி ஒப்புகொண்டால் அவரின் தலைமையில் அதிமுக தொடர்ந்து செயல்படும். இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து அதிமுகவை உடைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடும் எனவும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். நடப்பதை பார்க்கும்போது அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என்றே கணிக்கப்படுகிறது.