கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நோய்தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விதத்தில் தமிழகத்தில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என மாநில அரசு விதித்திருக்கிறது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை போல சனிக்கிழமைகளிலும் இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் உயிர்காக்கும் ஆக்சிசன் தமிழகத்தில் குறைவாக இருப்பதன் காரணமாக, உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மத்திய அரசிடம் மாநில அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் தமிழக சட்டசபைத் தேர்தல் சென்ற ஆறாம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் இரண்டாம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திலும் நோய் தொற்று விழிப்புணர்வு நடவடிக்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் நிச்சயமாக பின்பற்றப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்து இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், தேர்தல் ஆணையம் ஒரு புதிய உத்தரவை தமிழக அரசியல் கட்சிகளுக்கு விதித்திருக்கிறது. அதாவது, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போதும், வாக்கு எண்ணிக்கைக்கு பின்னரும், தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்து இருக்கிறது. வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது