தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் காலியாகவுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம், அசாமில் உள்ள ரங்கபாரா மற்றும் சிப்சாகர், கேரளாவில் உள்ள குட்டநாடு மற்றும் சாவாரா, மேற்கு வங்கத்தில் உள்ள ஃபாலகட்டா ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளும் தற்போது காலியாக உள்ளன.
தற்போதைய சூழலில் மேற்கண்ட தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது சிரமமானது என்று அந்த மாநிலத்தின் தலைமைச் செயலர்கள் மற்றும் தலைமை தேர்தல் அலுவலர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், காலியாக உள்ள இதர நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அந்தந்த மாநில சூழ்நிலைகளைப் பொருத்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.