கோயம்புத்தூரில் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும்!! நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நபர்!!
கோவை மாவட்டத்தில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர்பட்டியலில் சேர்த்து அவர்கள் வாக்களிக்கும் வரை கோவையில் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று கோவையை சேர்ந்த நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பல்வேறு கூச்சல்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் தற்பொழுது இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றது. இதில் முதல் கட்டமாக தமிழகம் உள்பட 21 மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. அடுத்து இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களுக்கு நேற்று(ஏப்ரல்26) தேர்தல் நடந்தது.
இதில் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் பல நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளது என்றும் அவர்களுக்கு உரிமை இருந்தும் வாக்களிக்க முடியவில்லை என்றும் பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில் கோவையை சேர்ந்த நபர் ஒருவர் கோவை மாவட்டத்தில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்கள் வாக்களிக்கும் வரை கோவை மாவட்டத்தில் தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த சுதந்திரக் கண்ணன் என்பவர் ஆஸ்திரேலியா நாட்டில் மருத்துவராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து வாக்களிக்க கோவை வந்த சுதந்திர கண்ணன் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க முடியாத நிலையில் சுதந்திர கண்ணன் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
சுதந்திர கண்ணன் அவர்கள் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் “நான் வாக்களிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து கோவை வந்தேன். ஆனால் வாக்காளர் பட்டியலில் என்னுடைய பெயரும் என் மனைவியுடைய பெயரும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களால் தேர்தலில் வாக்கு அளிக்க முடியாமல் போனது.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வாக்களித்தோம். இந்த முறை வாக்காளர் பட்டியலில் எங்களுடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முகவரியில் வசித்து வரும் என்னுடைய மகளுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தது.
எங்களைப் போலவே எங்கள் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு ஏப்ரல் 15ம் தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தோம். ஆனாலும் தேர்தல் ஆணையம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் நீக்கப்பட்ட எங்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து எங்களுக்கு வாக்களிக்க அனுமதி கொடுக்க வேண்டும். மேலும் நாங்கள் வாக்கு அளிக்கும் வரை கோவை தொகுதியின் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.