வெளியாகும் தேர்தல் அறிக்கை! உடன்பிறப்புகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா திமுக தலைமை!

0
141

அதிமுக சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னரே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு அந்தந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் தொடர்பான அனைத்து வேலைகளிலும் மிகவும் ஜரூராக இறங்கி வேலை பார்த்து வருகிறது. அதேபோல வேட்பாளர் பட்டியல், வேட்பாளர் தேர்வு என்று அனைத்து விஷயத்திலும் நின்று நிதானமாக யோசித்து செயல்பட்டுவருகிறது. காரணம் எந்த தொகுதியில் எந்த வேட்பாளரை நிறுத்தினால் நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய ஒரு வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதே அந்த கட்சியின் உள்நோக்கமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

அதன் காரணமாக தான் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதிலும் சரி, வேட்பாளர் தேர்விலும் சரி கண்ணும் கருத்துமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார். என்று சொல்லப்படுகிறது. அதேபோல நேற்றைய தினம் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் முதல் நாளே துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்து இருக்கின்றார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு வேட்புமனுவை முடித்துவிட்டு தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் காரணத்தால் இந்த வேட்பு மனுவை முதல்நாளே தாக்கல் செய்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.

அதுபோல நேற்றைய தினம் தன்னுடைய முதல் பிரச்சார பயணமாக சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் சித்ராவிற்கு ஆதரவாக தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

ஆளும் கட்சியான அதிமுக சார்பாக இவ்வாறு இவ்வளவு விறுவிறுப்பாக தேர்தல் தொடர்பான வேலைகள் அனைத்தும் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறமோ எதிர்கட்சியான திமுகவின் வேட்பாளர் பட்டியலை நேற்றைய தினம் தான் வெளியாகியிருக்கிறது. இதில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் போட்டியிடுகின்றார். அதேபோல திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த கா அன்பழகன் பேரன் வெற்றியழகன் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட இருக்கின்றார். அதேபோல திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் முதல்முறையாக களமிறங்கியிருக்கிறார்.

நேற்று ஒரே நாளில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட திமுக இன்று மாலைக்குள் தன்னுடைய தேர்தல் அறிக்கையையும் வெளியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவைப் பொறுத்தவரையில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 500 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையை தாக்கல் செய்து நம்பிக்கையுடன் களம் இறங்கியது. ஆனால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திமுகவின் கணவை சிதைத்து அந்தத் தேர்தலில் விசுவரூப வெற்றியைப் பெற்றார். அதிலிருந்து அவர் மரணம் அடையும் வரையில் திமுக ஒரு மிகப் பெரிய பலம் வாய்ந்த அணியாக சட்டசபைக்குள் நுழைந்திருந்தாலும் அதிமுகவிற்கு எதிராக பெரிய அளவில் கருத்துக்களை முன்வைக்கவில்லை என்று தான் சொல்கிறார்கள். ஏனென்றால் அந்த சமயத்தில் தமிழகம் முழுவதிலுமே அதிமுகவிற்கும் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் மிகப்பெரிய ஆதரவு இருந்து வந்தது. அதனை உணர்ந்து கொண்ட திமுக தலைமை சற்று அடக்கியே வாசித்ததாக சொல்கிறார்கள்.

அதற்குக் காரணம் ஒரு வேளை இங்கே நமக்கு பெரும்பான்மை இருக்கிறது என்ற காரணத்திற்காக இவர்களை விமர்சனம் செய்தால் பின்பு வெளியே சென்று நாம் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் பொது மக்களிடம் வாக்கு கேட்க முடியுமோ முடியாதோ என்று திமுக பயப்படும் அளவிற்கு ஜெயலலிதாவின் ஆதரவு பொதுமக்களிடையே காணப்பட்டதாக சொல்கிறார்கள்.

கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அதற்கு காரணம் அந்த தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் என்பதை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அனேக இடங்களில் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்த தேர்தலில் நாயகனே இந்த தேர்தல் அறிக்கை தான் என்றும் சொல்லும் அளவிற்கு அந்த தேர்தல் அறிக்கை இருந்தது.

ஏனென்றால் அந்த அளவிற்கு முழுக்க முழுக்க தமிழக மக்களை கவரும் ஒரு தேர்தல் அறிக்கையாக அந்த தேர்தல் அறிக்கை இருந்தது. அந்த தேர்தல் அறிக்கையில் தமிழகம் முழுவதிலும் அனைவருக்கும் இலவச வண்ண தொலைக்காட்சி, மற்றும் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதனால் கவரப்பட்ட தமிழக மக்களால் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று திமுக கடந்த 2006ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆட்சியில் அமர்ந்தது.இந்தநிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது திமுக விடுத்த தேர்தல் அறிக்கையைப் போலவே தற்போது நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையும் இருக்குமா என்பதே திமுகவின் உடன்பிறப்புகளின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.