அரசு போக்குவரத்து கழகங்களில் வேலைவாய்ப்பு… 5000 ஆக உயர்ந்த காலிப் பணியிடங்கள்…
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களின் எண்ணிக்கை தற்பொழுது 5000ஆக உயர்ந்துள்ளது. 5000 காலிப்பணயிடங்கள் இருக்கையில் 2000 காலிப்பணியிடங்களை மட்டும் நிரப்புவது பிரச்சனைக்கு தீர்வாக அமைந்து விடாது என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்பொழுது தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களில் மெக்கானிக்கல், நடத்துனர், ஓட்டுநர் என்று 1.21 லட்சம் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய பிரிவுகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பிரிவில் மட்டும் 5000 காலிப் பணியிடங்கள் உருவாகி உள்ளது.
இது குறித்து அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் “கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் அரசு போக்குவரத்து கழகம் காலிப்பணியிடங்களை கணக்கீடு செய்து பட்டியல் தயாரித்தது. அந்த பட்டியலின் அடிப்படையில் தமிழக அரசு 2000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி தந்துள்ளது.
தமிழக அரசு அனுமதி தந்துள்ள 2000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் 5000 காலிப்பணியிடங்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பிரிவில் காலியாக உள்ளது.
ஆகவே தமிழக அரசு அனுமதி அளித்துள்ள 2000 பணியிடங்களை மட்டும் நிரப்புவதால் தற்பொழுது உள்ள பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. தாமதம் இன்றி மீதம் உள்ள 3000 காலிப் பணியிடங்களையும் நிரப்பினால் தான் அரசு பேருந்துகளை முழுமையாக இயக்க முடியும்” என்று கூறினர்.