மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவருக்கும் கருத்து வேறுபாடானது இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான். ஆனால் தற்சமயம் எதனால் இந்த கருத்துவேறுபாடு இருந்தது என்பது குறித்து ரஜினி மனம் திறந்து பேசியுள்ளார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் டாக்குமென்ட்ரி படங்கள் பெரிதளவில் பேசப்படுகிறது.
அந்த வரிசையில் தற்பொழுது அதிமுகவின் முன்னாள் அமைச்சராக இருந்த ஆர் எம் வீரப்பன் குறித்து, ஆர்எம்வி கிங் மேக்கர் தி டாக்குமென்ட்ரி என்ற ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தான் ரஜினிகாந்த் ஜெயலலிதாவிடம் ஏன் கருத்து வேறுபாடு இருந்தது என்பது குறித்து விவரித்து பேசியுள்ளார்.
சினிமா திரையுலகில் தயாரிப்பாளராக இருந்த ஆர் எம் வீரப்பன் ரஜினிக்கு மிகவும் நெருக்கமானவர். ரஜினியின் பாட்ஷா படம் நூறாவது நாள் வெற்றி அடைந்ததையடுத்து அது ரீதியான நிகழ்ச்சி நடைபெற்றது. அச்சமயத்தில் ஆர் எம் வீரப்பன் அமைச்சராக இருந்தார். மேடையிலேயே ரஜினிகாந்த் வெடிகுண்டு கலாச்சாரம் குறித்து பேசியுள்ளார். எப்படி பொது மேடையில் வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி பேசலாம் என கோபமடைந்த ஜெயலலிதா அமைச்சரவையிலிருந்து ஆர் எம் வீரப்பனை அதிரடியாக நீக்கம் செய்து விட்டார்.
இதனால் ரஜினிக்கு மிகவும் மன வருத்தமாக இருந்துள்ளது. நான் இப்படி பேசியதால் தான் அவரின் பதவி பறிபோனது எனக் கூறி புலம்பி தள்ளி உள்ளார். அதுமட்டுமின்றி ஆர் எம் வீரப்பனை நேரில் சந்தித்து, உங்கள் சார்பாக நான் ஜெயலலிதாவிடம் பேசவா என்று கேட்டுள்ளார். ஆனால் ஆர் எம் வீரப்பன் இதனை துளிகூட பொருட்படுத்தாமல் பேச வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். நீங்க என்ன பேசினாலும் அந்த அம்மா ஏத்துக்க மாட்டாங்க, அதையும் மீறி உங்க மரியாதையை குறைத்து கொள்ளாதீர்கள்.
அதே போல நீங்கள் பேசி தான் எனக்கு அந்த பதவி கிடைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது எனக் கூறிவிட்டாராம். இதைத் தான் தற்பொழுது அவரின் டாக்குமென்டரி படத்தில் ரஜினிகாந்த் பேசியுள்ளார். ஆர் எம் வீரப்பன் பெரிய மனுஷன், அவர்தான் உண்மையான கிங் மேக்கர் என கூறியுள்ளார்.
அதேபோல இந்த சம்பவத்தை அடுத்து ரஜினிகாந்த் ஜெயலலிதாவை பழிவாங்கும் நோக்கில் மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது எனக் கூறிய வாய்ஸ் நோட் ஆனது திமுகவிற்கு சாதகமாக அமைந்து அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.