தமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட இருக்கிறது.
இந்தப் ஒன்பது மாவட்டங்களுக்கான தேர்தலை செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதனடிப்படையில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு மாநில தேர்தல் ஆணையம் வேலைகளைத் தொடங்கி இருக்கிறது. இதனைதொடர்ந்து வாக்காளர் பட்டியலை தயார் செய்வது வாக்குச்சாவடிகள் அமைப்பது போன்ற பணிகளை மாவட்ட ஆட்சியாளர்கள் பல அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள்.
இதற்காக 70 பக்கங்களை கொண்ட புத்தகமும் வெளியிடப்பட்டு இருக்கின்றது. இதனை தொடர்ந்து தேர்தல் நடைபெற இருக்கின்ற 9 மாவட்ட உள்ளாட்சிகளுக்கு உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கும் பணி ஆரம்பித்திருக்கிறது வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.இதன் காரணமாக, தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்காக தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகிறார்கள். அதிமுகவைப் பொறுத்தவரையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக சென்ற 5 ஆம் தேதி தலைமை கழகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் அன்றைய தினம் அந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், இன்று அதிமுகவில் தலைமை அலுவலகத்தில் 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று முன்னரே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.அதனடிப்படையில் இன்று காலையில் அதிமுகவின் தலைமைக் கழகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி ,வைத்திலிங்கம் உள்ளிட்டோர் வருகை தந்தார்கள்.
அப்போது அவர்கள் திருப்பத்தூர், ராணிப்பேட்டை ,வேலூர், உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்திருக்கிறார்கள். இதில் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய நகர, பேரூராட்சி, கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றார்கள் என்று சொல்லப்படுகிறது.இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து விவாதம் செய்யப்பட்டது ஆட்சி அதிகாரத்தில் திமுக இருக்கிறது என்பதால் பல குறுக்கீடுகள் நமக்கு உண்டாகும் அதை எல்லாம் எதிர்கொண்டு தான் நாம் வெற்றி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
கட்சியின் தலைமை நிறுத்தும் வேட்பாளர்களை எல்லோரும் ஏற்றுக்கொண்டு அவரை வெற்றிபெற வைக்க வேண்டும். நாம் மிகக் கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம். ஆகவே ஒவ்வொருவரும் அதற்காக பணிகளை செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ் அவர்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.தேர்தல் நடைபெறும் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெற ஒவ்வொரு தொண்டரும் மிகக்கடுமையாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கு புதிய வியூகம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அந்த சமயத்தில் மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் பணிகளில் இதுவரையில் என்னென்ன செய்திருக்கிறோம் என்பது தொடர்பாக தெரிவித்தார்கள் இன்று மாலை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆலோசனை செய்ய இருக்கிறார்கள்.அதிமுக தலைமை கழகத்தில் நாளையும் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் இருக்கின்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கிறார்கள்.
முதலில் மூன்று தினங்கள் கூட்டம் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது இருந்தாலும் தற்சமயம் இரண்டு தினங்களில் ஆலோசனை கூட்டம் முடிக்கப்பட இருக்கிறது.உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக எட்டாம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றும்போது 100 சதவீத வெற்றியை நாம் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
அதேபோல தற்சமயம் அதிமுக தலைமை கழகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று இருக்கிறது .உள்ளாட்சித் தேர்தலுக்கு மிகப் பெரிய கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.