அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மஹாலின் முன்பு நடத்தப்படவிருக்கிறது அதற்காக அந்த பகுதியில் மிகப் பிரம்மாண்டமான மேடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழ்நிலையில், பொதுக்குழுவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழை அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கும் நடவடிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்த அழைப்பிதழ் அனுப்பப்படுவதை பன்னீர்செல்வம் தரப்பு கடுமையாக ஆட்சேபித்து வருகிறது. அவருடைய அணியை சார்ந்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இதனை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
ஆனாலும் கூட அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் சர்ச்சையில் இருக்கின்ற நிலையில் பொதுச் செயலாளர் அடுத்த நிலையில் இருக்கின்ற பொருளாளருக்கு தான் கட்சியை வழிநடத்தும் அதிகாரம் இருக்கிறது.
பொருளாளர் பன்னீர்செல்வம் ஒப்புதல் வழங்காமல் பொதுக்குழுவை கூட்டினால் அது சட்டப்படி செல்லாது என்று கூறப்படுகிறது.
அழைப்பிதழ் அனுப்பி அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்தாலும் கூட வருகின்ற 11ஆம் தேதி பொதுக்குழு நடப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கு பதில் வழங்கும் விதத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளருமான நத்தம் விஸ்வநாதன் தெரிவிக்கும் போது அதிமுகவின் பொதுக்குழு சட்டப்படி சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் என கூறியிருக்கிறார்.
ஆகவே இந்த பொதுக்குழு நடைபெறுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி ஏற்படுத்தப்பட்டு எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக நியமனம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனக் கூறியிருக்கிறார்.
அதேபோல குறிப்பாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா உள்ளிட்டோரின் காலகட்டத்தில் பொதுச்செயலாளர் பதவியில் என்னென்ன அதிகாரங்கள் இருந்ததோ, அவை அத்தனை அதிகாரங்களையும் உள்ளடக்கிய பொதுச்செயலாளர் பதவி ஏற்படுத்தப்பட்டு, அந்த பதவியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நியமனம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இப்படியான சூழ்நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
அதோடு ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற இருக்கின்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட இருப்பதாகவும், அதே சமயம் அதிமுகவின் பொருளாளர் என்ற பதவியிலிருந்து பன்னீர்செல்வம் நீக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.