குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் பாதியில் சென்னை திரும்பிய இபிஎஸ்! காரணம் என்ன?

Photo of author

By Sakthi

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து 4 நாள் பயணமாக கடந்த 22ஆம் தேதி அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். அசோகா ஹோட்டலில் நடந்த குடியரசு தலைவர் பிரிவு உபசார விழாவிலும் அவர் பங்கேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து புதிய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்க உள்ள திரௌபதி முர்முவை எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்த வாழ்த்து தெரிவித்தார். அதேபோல அதிமுகவை சார்ந்த தம்பிதுரை, வேலுமணி, உள்ளிட்டோர் இந்த சந்திப்பின்போது எடப்பாடி பழனிச்சாமி உடன் சென்றிருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ,உள்ளிட்டோரையும் தனித்தனியாக சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி பேசுவதற்கு திட்டமிட்டிருந்தார் என சொல்லப்படுகிறது.

அதிமுகவில் தற்போது நிலவி வரும் உட்கட்சி பிரச்சனை ,பன்னீர்செல்வத்தின் செயல்பாடு, உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்டோரிடம் எடுத்து தெரிவித்து கூட்டணி கட்சியான பாஜகவின் ஆதரவை பெறுவதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். இந்த சந்திப்புக்கு அவர் நேரம் கேட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் தொடர் நிகழ்ச்சிகள் காரணமாக இருவரின் நேரமும் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

ஆகவே இன்று நடைபெறவுள்ள குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் தன்னுடைய டெல்லி பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்னை திரும்பியிருக்கிறார்.

இதனையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஓபிஎஸ், இபிஎஸ், உள்ளிட்டோர் தனித்தனியே நேரம் கேட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.