எனது அப்பா கூட காரணம் இல்லை .. நான் அமைச்சராக எங்கள் அண்ணன் தான் காரணம்!! உதயநிதியின் அதிரடியான பேச்சு !
இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி நேற்று பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த விழாவானது பால்வளத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் சாமு நாசர் தலைமையில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,
பல நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று பலர் என்னிடம் தேதி கேட்கும் பட்சத்தில் இந்த பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் மட்டும் நானாக முன்வந்து நானும் வருகிறேன் என தேதி கொடுத்தேன். எனக்கு தற்பொழுது அமைச்சர் என்ற பொறுப்பு வந்தாலும் நான் எப்பொழுதும் உங்கள் வீட்டு பிள்ளையாக தான் செயல்படுவேன்.
அதேபோல 2019 ஆம் ஆண்டு நான் திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று அதற்கு அடுத்தபடியாக பேசிய முதல் பொதுகுழு மேடை ஆவடி தான். அதேபோல அமைச்சரான பிறகும் இங்கு வந்து பேசுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
மற்றவர்களை விட எனக்கு அமைச்சர் பதவி கிடைக்க முக்கிய காரணம் நாசர் அண்ணன் தான். நாங்கள் ஆட்சிக்கு வந்ததையடுத்து எனக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று ஆரம்ப கட்டத்தில் இருந்தே வலியுறுத்தி வந்தவர்.எனக்கு கிடைத்த இந்த பதவிக்கு நான் உண்மையுடன் செயல்படுவேன். பல நாட்களாக ஆவடிக்கு விளையாட்டு ஸ்டேடியம் வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் கூடிய விரைவிலேயே அமைக்கப்படும்.
எனது தாத்தா கலைஞர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் இருவரும் நட்புக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்கள். பெரியாரிடம் இருந்து அவர் கொள்கைகளை கற்றுக்கொண்டு அதனையே பிரச்சாரம் செய்துள்ளார். எனது திருமணம் கூட பேராசிரியர் தலைமையில் நடைபெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அதுமட்டுமின்றி 2019 ஆம் ஆண்டு இளைஞரணி செயலாளர் ஆக நான் பதவி வகித்த போது அவருடைய வாழ்த்து தான் முதலில் எனக்கு கிடைத்தது.
அதேபோல அதிமுகவின் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் சில தினங்களுக்கு முன்பு அவர்களது காருக்கு பதிலாக எனது காரில் ஏற பார்த்தார்கள். நானும் என் காரை எடுத்துக் கொண்டுதான் போகலாம் என்று கூறினேன். ஆனால் கமலாலயம் போக வேண்டாம் என்று தெரிவித்தேன். நான் சொல்வதைக் கேட்டு அவர்கள் காரை எடுத்து சென்றிருந்தால் தற்பொழுது சண்டையிட்டுக் கொள்வது போல காரும் இரண்டாக பிளந்து இருக்கும் என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஐ விமர்சனம் செய்தார்.