முன்னாள் வீரர்களுக்கு மேடையில் இடம் இல்லை… உதயநிதி நிகழ்ச்சியில் நடந்த ஒலிம்பியன்களுக்கு நிகழ்ந்த அசௌகரியம்…!

Photo of author

By Janani

விளையாட்டுதுறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் விளையாட்டு துறையில் புது மாற்றங்கள் வரும் என பேசப்பட்ட நிலையில், அவர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு இடம் ஒதுக்காத நிகழ்வு அரங்கேறியுள்ளது.

உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வருகிற ஜனவரி மாதம் 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரை நாடு முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெற்றிகோப்பை நாடு முழுவதும் உள்ள 15 முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று சென்னை வந்த அந்த கோப்பை அறிமுக நிகழ்ச்சிஎழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,சென்னை மேயர் பிரியா ,முன்னாள் ஒலிம்பியன்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் போது மேடையில் உலககோப்பை போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்களான வி.ஜெ.பிலிப்ஸ், கோவிந்தா, ஃபெர்னாண்டஸ் ஆகியோருக்கு இடம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பயிற்ச்சியாளர் பாஸ்கரன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

அதனை தொடர்ந்து அவர் அமைச்சரிடம் முறையிட்டப்பின்னரே முன்னாள் வீரர்களுக்கு இருக்கை வழங்கப்பட்டது. உலகக் கோப்பை நாயகன்களுக்கும், ஒலிம்பிக் வீரர்களுக்கும் இருக்கை ஒதுக்காமல் அவர்கள் வாக்குவாதம் செய்தப்பின்னர் இடம் ஒதுக்கிய சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு துறை விழாவில் வீரர்களுக்கு சரியான மரியாதையும் அங்கீகாரமும் இனியாவது கிடைக்குமா என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.