செயற்குழு கூட்டம் அறிவிப்பு! அதிகரிக்கும் அதிருப்தி குரல்? குழப்பத்தில் EPS
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், மே 2ஆம் தேதி கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இது, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்த பிறகு நடைபெறும் முதல் முக்கிய கூட்டமாகும்.
இந்த கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியின் விரிவாக்கம், தேர்தல் திட்டங்கள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட அதிமுக இனிமேல் பாஜகவுடன் கூட்டணியே இல்லை என்று அறிவித்தது. இதை எடப்பாடி பழனிசாமியும் அவ்வப்போது உறுதியாக அறிவித்திருந்தார். இந்நிலையில் திடீரென்று அவர் டெல்லி சென்று அமித்ஷா அவர்களை சந்தித்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அதிமுகவினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து தமிழகம் வந்த அமித்ஷா எடப்பாடி பழனிசாமி இணைந்து அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணியில் இணைவதை அறிவித்தனர். திமுகவை எதிர்க்க வலுவான கூட்டணி தேவை என்ற வகையில் இந்த கூட்டணியை பலர் ஆதரித்தாலும், அண்ணாமலை அதிமுக மற்றும் அதன் தலைவர்களை விமர்சித்து பேசியது, மேலும் பாஜக தேசிய தலைமை அதிமுகவை பிளவு படுத்தும் வகையில் அதன் உட்கட்சி விவகாரங்களில் தலையிட்டதை வைத்து பலர் இந்த கூட்டணிக்கு தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக திடீரென பாஜகவுடன் இணைந்ததற்கு உட்கட்சியிலேயே கருத்து வேறுபாடுகள் எழுந்து வருகின்றன. மேலும் இதன் அடிப்படையில் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை கடும் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செயற்குழு கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த வகையில் வரும் மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியில் எழுந்த அதிருப்தி குரல்கள் எதிரொலிக்கலாம் என்று கூறப்படுகிறது.