இந்த மாத இறுதி வரையில் நீட்டிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு! தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி முதல் நேற்று ஏற்கனவே இருந்துவரும் கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 9ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு, உலக சுகாதார நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து புதிய கட்டுப்பாடுகளை விதித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார், இதுகுறித்து அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டு இருக்கின்ற செய்திக்குறிப்பில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

அதாவது நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதத்திலும் பரவிவரும் புதிய வகை நோய்த்தொற்றை கருத்தில் வைத்து பொதுமக்கள் நலன் கருதியும், எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொது மக்கள் ஒரே சமயத்தில், ஒரே இடத்தில், கூட்டம் கூடுவதால் நோய்த்தொற்றுகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகவே தற்போது நடைமுறையில் இருந்துவரும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் 31ம் தேதி வரையில் அமலில் இருக்கும் இவை தவிர்த்து பின் வரும் கூடுதல் கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. 16ஆம் தேதி முழு ஊரடங்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி இப்போது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட மற்ற செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பொதுவான சில அறிவுரைகளை பின்பற்ற பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இதுவரையில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், பொதுமக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதிலிருந்து இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் கட்ட தடுப்பு ஊசியையும் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிபவர்கள் உரிமையாளர்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை வைத்திருக்கவேண்டும். அனைத்து கடைகளிலும் குளிர்சாதன வசதியை தவிர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய்தொற்று பரவலை தடுக்க நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் இருக்கின்ற பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணறிவு வரையில் வரையறை செய்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளின் அடிப்படையில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவை மேற்கொள்ளவேண்டும்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும். இங்கே மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல், இவை தவிர மற்ற செயல்பாடுகளுக்கு அனுமதி கிடையாது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய் பரவலை வீடுவீடாக கண்காணிக்கப்படும். நோய் தொற்று கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் நோய் தொற்று வேகமாக பரவி வருவதன் காரணமாக, பொது இடங்களில் நோய்த்தொற்று தடுக்கும் நடைமுறைகள் கட்டாயமாக பின்பற்றுவதை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்தவேண்டும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் நோய்த்தொற்று தடுக்கும் நடைமுறைகள் பின்பற்றப்படும். அதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நோய் தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை மூட பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நோய்த்தொற்று அதிகரித்துவரும் காரணத்தால், உரிய சிகிச்சை வழங்கிட தேவையான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்றிலிருந்து பொது மக்களை காத்திட அரசு முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.