300 ரூபாய் கொடுத்தால் அரசு அனுமதி இல்லாமலேயே ஸ்மார்ட் ரேஷன் கார்டு கிடைக்கும் : தாசில்தார் நடத்திய விசாரணையில் கிடைத்த திடுக்கிட்டு தகவல்கள்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா அலுவலகம் அருகே ஆர்.எம்.எஸ் கணினி மையம் இருந்து வந்தது. அந்த கடையின் சுவற்றில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் தயார் செய்து தரப்படும் என்று விளம்பரம் செய்து ஒட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்ததால் அங்கு சோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. இதனடிப்படையில் காட்டுமன்னார்கோயில் தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமையில் வட்ட வழங்கல் அதிகாரி சாருலதா மற்றும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

நேரடியாக சென்று சோதனை செய்யப்பட்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த கடையில் ஆறு பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டு வாடிக்கையாளர்களின் தகவலை பெற்று போலியாக ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் தயாரிப்பது தெரியவந்துது.

அங்கு அசலை போன்று பார் கோடுகளுடன் முப்பதுக்கும் மேற்பட்ட போலி ஸ்மார்ட் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வட்ட வழங்கல் அதிகாரி சாருலதா காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

காவல்துறையினர் வந்தபின்பு கடையின் உரிமையாளர் முகமத் சம்ஹீதிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் அங்கு போலி ஸ்மார்ட் கார்டுகள் தயார் செய்யவில்லை கலர் ஜெராக்ஸ் மட்டுமே எடுத்து தரப்படுகிறது என்று முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளார்.

அந்தக் கடையை முழுமையாக சோதனை செய்த அதிகாரிகள் போலி ரேஷன் கார்டுகள் தயாராவதை உறுதி செய்தனர். இதனையடுத்து கடையில் இருந்த பிரிண்டர் ஜெராக்ஸ் மிஷின் லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

அந்த உரிமையாளர் கடந்த 5 வருடங்காலக அங்கு கடை நடத்தி வந்ததுள்ளார். இவருக்கு காட்டுமன்னார்கோயில் பகுதியில் மேலும் இரண்டு கடைகள் இதேபோன்று இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டாக தமிழக அரசு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் அச்சிடுவதை நிறுத்தியுள்ளது. இவ்வாறு கணினி மையத்தில் போலியாக அச்சிடுவது சட்டத்துக்கு புறம்பானது.

இதற்கிடையில் கணினி மைய உரிமையாளருக்கு ஆதரவாக ஜமாத்தார்கள் வந்து வாக்குவாதம் செய்ததால். மேலும் அவர்களுக்கு ஆதரவாக அதிகாரத்தில் உள்ள ஒருவருக்கு போன் போட்டு வட்ட வழங்கல் அதிகாரி சாருலதா நடவடிக்கை எடுப்பதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் செய்வதறியாது தவித்த வட்ட வழங்கல் அதிகாரி சாருலதா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றார்.

Leave a Comment