ரசிகர் மன்றம் TO அரசியல் கட்சி வரை.. விஜய் தவெக-விற்காக அமைத்த வியூகங்கள்!!

Photo of author

By Vijay

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு,  ஜெயலலிதாவுக்கு  ஆதரவுப் பிரச்சாரம் என விஜய்  செய்த அரசியல்!

நடிகர் விஜய்,  தனது  18 வயதில் (1992-ஆண்டு) நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக   அறிமுகமாகி திரையுலக பயணத்தை தொடங்கினார். தமிழக திரையுலகில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு ரசிகர் மன்றத்தை, மக்கள் இயக்கமாக மாற்றினார் நடிகர் விஜய். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி விஜய் மக்கள் இயக்கம்  சார்பாக இலவச உணவு வழங்குவது, இரத்த தானம் செய்வது, போன்ற சமூக சேவைகள் செய்து வந்தார்கள்.

இந்த நிலையில் 2010, 2011 ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு, தமிழக மீனவர் பிரச்னைக்கு குரல் கொடுத்தது,  இலங்கை தமிழருக்கான உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது என  அரசியல் பக்கம் திரும்பினார் விஜய். ‘ஈழ’ தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சே வைப் போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்  என்று ஜெயலலிதா பேசியதை வரவேற்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.  2011 ஆம் ஆண்டு  அ.தி.மு,க  மற்றும்  தே.மு.தி.க கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அந்த நேரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் நேரடியாக அரசியல் களத்தில் இறங்கி ஜெயலலிதாவுக்கு  ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். இந்த  தேர்தலில்  அதிமுக ஆட்சி அமைத்தது.

அதன் பிறகு சேலத்தில் நடந்த மக்கள் இயக்க கூட்டத்தில் கலந்து கொண்ட விஜய் , தனது ரசிகர்களிடையே நேரடியாக அதிமுக- ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி கூறி தனது ரசிகர்களை அரசியல் பக்கம் ஈர்க்க தொடங்கினார். தலைவா திரைப்படம் வெளியீடு தொடர்பான பிரச்சனை காரணமாக பொது வெளியில் அரசியில் பேசுவதை குறைத்து கொண்டார். மேலும் ‘கத்தி’, ‘சர்கார்’ போன்ற படங்கள் வாயிலாக 2ஜி வழக்கு, ஒரு விரல் புரட்சி என அரசியல் பேசினார். 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தார். மேலும் மாணவி அனிதாவின் வீட்டுக்கு திடீரென வருகை தந்த விஜய், அனிதாவின் சகோதரரிடம், “இறந்தது என் தங்கை; அண்ணனிடம் எப்போது வேண்டுமானாலும் உதவி கேளுங்கள்” என்று கூறியிருந்தார்.

ஜெயலலிதா ,கருணாநிதி என்ற இரண்டு ஆளுமைகள் மறைவிற்கு பிறகு தமிழக அரசியலில் இருக்கு வெற்றிடத்தை நிரப்ப கமல், ரஜினி ஆகிய இருவரும் அரசியல் களத்தில் இறங்கினர். ஆனால் மக்களிடத்தில் வரவேற்பு இல்லை. ஆனால் விஜய் தனது அரசியல் நகர்வுகளை மெதுவாக தொடங்கினார். மேலும் மாணவ – மாணவிகளைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கும் விழாவை பெரிதாக நடத்தத் தொடங்கினார். இது மக்கள் இடத்தில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழக கட்சியை  அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், மேலும்  அக்டோபர்  27 கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற இருக்கிறது .எனவே மக்கள் தங்களது ஆதரவை  இனி வரும் தேர்தல்களில் கொடுப்பார்கள்.