சிஎஸ்கே போட்டி டிக்கெட்டை வாங்க சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!! கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆரவாரம்!!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டினை வாங்க இரவு முழுவதும் கொட்டும் மழையில் காத்திருந்த ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎல் போட்டியின் 16 ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 7 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அந்த வகையில் வரும் மே 6 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 3ம் தேதி தொடங்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் இன்று நேரடியாக டிக்கெட் விற்பனையும் மற்றும் இணையதள மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை நடந்து முடிந்த 15 சீசன்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன் அணிகள் போதும் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.
அதன் அடிப்படையில் மே 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வாங்குவதற்காக மே 2 தேதி இரவில் இருந்தே ஏராளமான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சூழ்ந்துள்ளனர்.
இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை அடித்தாலும் எங்கேயும் நகராமல் டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று ஆரவாரம் செய்தனர். இவர்களை கட்டுப்படுத்துவதற்காக நூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். ரசிகர்கள் ஆரவாரம் செய்ததால் அவர்களை அடக்க காவலர்கள் லேசான தடியடி நடத்தினர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.