குடியாத்தம் அருகே யானைகள் தாக்கியதில் விவசாயி காயம் !
நூழிலையில் உயிர் தப்பிய விவசாயி-தொடர் யானைகள் அட்டகாசத்தால் கிராம மக்கள் அச்சம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே உள்ள கொத்தூர் கிராமம் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டிய மலை கிராமமாகும் இங்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து யானைகள் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இதனிடையே இன்று அதிகாலை கொத்தூர் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே விவசாய நிலத்துக்குள் யானைகள் புகுந்துள்ளது. அப்பொழுது விவசாய நிலத்தில் காவலுக்கு இருந்த சுந்தர்ராஜ் என்பவரை யானைகள் துரத்தியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக நூழிலையில் உயிர் தப்பிய விவசாயி சுந்தர்ராஜ் காயம் அடைந்தார். மேலும் அவரது அலறல் சத்தம் கேட்ட ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் யானைகளை காட்டுக்குள் விரட்டி அடித்தனர்.
மேலும் வனத்துறையை தொடர்பு கொண்டால் அவர்கள் தொலைபேசி எடுப்பதில்லை எனவும் யானைகளை விரட்ட வனத்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை. விவசாயிகளே ஒருங்கிணைந்து யானைகளை இரவு பகல் என காட்டுக்குள் விரட்டி வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும் யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.