தமிழ் மாதத்தில் ஆறாவதாக வரக் கூடிய புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.இம்மாதத்தில் வரக் கூடிய ஒவ்வொரு சனிக்கிழமையிலும் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகும் என்பது ஐதீகம்.
பெருமாளை வணங்குபவர்கள் இம்மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை எடுத்துக் கொள்வார்கள்.நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமை வருவதால் உரிய முறையில் பூஜை செய்து வழிபாடு நடத்தினால் வீட்டில் செல்வ வளம் குறையாமல் இருக்கும்.
சனிக்கிழமை பெருமாள் வழிபாடு
அன்றைய தினம் அதிகாலை நேரத்தில் எழுந்து வீடு மற்றும் பூஜை அறையை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.பிறகு தலைக்கு குளித்து விட்டு பூஜை பொருட்களை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும்.
பிறகு ஒரு பித்தளை சொம்பில் அரிசி நிரப்பி பூஜை அறையில் வைக்கவும்.அடுத்து பெருமாள் திருவுருவ படத்திற்கு முன் வாழை இலையில் சர்க்கரை பொங்கல்,சுண்டல்,வடை,தயிர் சாதம்,புளி சாதம் உள்ளிட்டவற்றை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.இதை அனைத்தும் முடியாதவர்கள் தங்களால் முடிந்ததை நெய்வேத்தியமாக படைக்கலாம்.
அதற்கு முன்னர் பூஜை அறையின்’தரையில் மாக்கோலம் போட்டு நெய்வேத்தியம் படைக்க வேண்டும்.பிறகு பூஜை அறையில் துளசி,பச்சை கற்பூரம் சேர்த்த தீர்த்தத்தை வைத்துக் கொள்ளவும்.அடுத்து ஒரு தாம்பூலத்தில் வெற்றிலை,பாக்கு,தேங்காய்,பழம் வைக்க வேண்டும்.
அதன் பிறகு பெருமாள் திருவுருவ படத்திற்கு முன் மாவிளக்கு போட்டு கற்பூர ஆரத்தி காட்டி கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு பெருமாளை வழிபட வேண்டும்.இப்படி பெருமாளை வழிபட்டால் கோடி நன்மைகள் கிடைக்கும்.