கத்தாரில் நடைபெற்ற FIFA உலகக்கோப்பை போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோப்பையை கைப்பற்றி உலக மக்கள் கொண்டாடும் நாயகனாக அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி திகழ்கிறார். மெஸ்ஸி எவ்வளவு திறமையான வீரர் என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு விஷயம் தான் ஆனால் தனது 35 வயதிலும் மெஸ்ஸி தனது உடலை கட்டுக்கோப்பாகவும், மிகுந்த சுறுசுறுப்பாகவும் செயல்படுவதற்கு பின்னால் உள்ள சீக்ரெட் என்னவென்று நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலகக்கோப்பை வெற்றியாளர் மெஸ்ஸியின் பிட்னெஸ் சீக்ரெட் பற்றி இந்த பகுதியில் நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
கால்பந்து ஜாம்பவானான மெஸ்ஸி ஒவ்வொரு தடவை போட்டி நடைபெறுவதற்கு முன்னர் தனது உடலின் சுறுசுறுப்பை அதிகரிப்பதில் கவனத்தை செலுத்துகிறார். மெஸ்ஸி தனது வொர்க்அவுட்டை பல பிரிவுகளாக பிரித்திருக்கிறார். இவர் உடலை வலுப்படுத்த பில்லர் பிரிட்ஜ், லங்ஸ், ஹாம்ஸ்டரிங் ஸ்ட்ரெட்சஸ் மற்றும் பில்லர் ஸ்கிப்ஸ் போன்ற கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார். தனது கால் தசைகளை வலுப்படுத்த அவர் ஸ்குவாட்ஸ் பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். பெரும்பாலும் இவர் தனது கால் தசைகளின் வலிமைக்கு ஸ்குவாட்ஸ், ஸ்கிப்பிங் ரோப்ஸ் மற்றும் பில்லர் ஸ்கிப்ஸ் போன்றவற்றை வழக்கமாக செய்து வருகிறார்.
மெஸ்ஸியின் ஆற்றலுக்கு முக்கிய காரணம் தண்ணீர், கடுமையான உடற்பயிற்சிகளை செய்து முடித்ததும் தனது உடலை நீரேற்றமாக வைத்திருக்க இவர் அதிகளவு தண்ணீரை குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் மற்றும் தன் உடலை கூலாக வைக்க 5 முதல் 10 நிமிடங்கள் ஜாக்கிங் செய்கிறார். உடற்பயிற்சியுடன் சேர்த்து கடுமையான டயட்டையும் பின்பற்றுகிறார், இவரது உணவில் முழு தானியங்கள், பச்சை காய்கறிகள், ஆலிவ் ஆயில், நட்ஸ் மற்றும் பழங்கள் தவறாமல் இடம்பெறும். மேலும் இவர் தனது உணவில் சர்க்கரை சேர்த்துக்கொள்வதில்லை.