முதன் முதலில் திருமுறை, திருப்புகழ்! அரோகரா ஆனந்த கோஷத்துடன் அரங்கேறிய பழனி முருகன் குடமுழுக்கு விழா!
திண்டுக்கல்லில் அமைந்துள்ள புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் வேதங்கள் முழங்க கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலகப் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடைசியாக 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு அடுத்த கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் கும்பாபிஷேகம் தள்ளிப்போனது.
இதையடுத்து இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த அறங்காவல் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு 2019 ஆம் ஆண்டு பாலாலய பூஜையுடன் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்றன. இதன்படி இன்று ஜனவரி 27 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9:30 வரை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த 18 ஆம் தேதி பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டு கலசஸ்தாபனம் நடைபெற்றது. அடுத்து மூலவர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் உபசன்னதி தெய்வங்களின் சக்தி கலசத்தில் கடந்த 23ஆம் தேதி கொண்டுவரப்பட்டது. இதை 90 குண்டங்கள் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் முதற்கால யாக பூஜை நடைபெற்றது.
ஐந்து கால பூஜைகள் முடிந்ததும் ஆறாம் கால பூஜைக்கு ஐந்திருக்கை ஐந்து சுற்று பூஜை, விதை, தண்டு, வேர், வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. அடுத்து கந்தபுராணம் பாடப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5:30 மணி அளவில் ஏழாம் கால பூஜையும் இன்று வெள்ளிக்கிழமை காலை 4:30 எட்டாம் கால பூஜையும் தொடங்கி நடைபெற்றது.
அப்போது பல்வேறு வகை மூலிகைகள் மற்றும் வாசனை திரவியங்களால் யாகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனையும் காட்டப்பட்டது. தொடர்ந்து திருமுறை, திருப்புகழ், கட்டியம், கந்தபுராணம், பாடப்பெற்று வாத்திய இசைகளுடன் சக்தி கலசங்களின் புறப்பாடு நடைபெற்றது. அடுத்து வேதங்கள் முழங்க ராஜகோபுரம், தங்க கோபுரங்களின் கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ராஜகோபுரம், தங்க கோபுரம் மற்றும் மக்களின் மீது ஹெலிகாப்டரில் மலர்கள் தூவப்பட்டன.
கும்பாபிஷேகம் விழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தாலும் 4000 விஐபி மற்றும் 2000 பொது மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் பாதுகாப்பு பணியில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.