சிவகார்த்திகேயன் முருகதாஸ் கூட்டணியில் எஸ்.கே- 23 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஏராளமான வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, நடிப்பில் வெளியான அமரன் மிகப்பெரும் பிளாக்பஸ்டர் வெற்றி படமாக அமைந்தது. 300 கோடி வசூலை தாண்டி இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கண்டிருக்கும் அந்தப் படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான ஒரு படமாக அமைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே -23 என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். கடந்த 2020- ஆம் ஆண்டு வெளியான தர்பார் படத்துக்கு பிறகு 3 வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்த முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து இந்த படத்தினை தொடங்கியுள்ளார். இதற்கு தற்காலிகமாக ‘எஸ்கே-23‘ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க உள்ளார். ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ என்ற கன்னட படத்தின் மூலம் புகழ்பெற்ற இவர் சிவகார்த்திகேயன் படத்தில் தமிழ் சினிமாவில் முதன் முறையாக அறிமுகம் ஆகிறார்.
மேலும் இவர்களுடன் வித்யூத் ஜம்வால், விக்ராந்த், சபீர், பிஜு மேனன், போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றார்கள். ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கிய இதன் படப்பிடிப்பு 90% நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வருகின்ற 2025- ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கான பணிகளை தற்போது படக்குழுவினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
முருகதாஸ் சிவகார்த்திகேயன் கூட்டணியில் இந்த படம் எஸ்கேவுக்கு மீண்டும் ஒரு வெற்றி படமாக அமையும் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.