முதல் கட்ட ஜேஇஇ மெயின் தேர்வு நாளை தொடக்கம்! செய்முறை தேர்வுகளும் ஆரம்பம்! மாணவர்கள் தவிப்பு
ஐஐடியில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு நாளை தொடங்க இருக்கிறது. சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத இருக்கிறார்கள்.
தற்போது நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து இன்ஜினியரிங் படிப்பதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வான ஜேஇஇ – ல் தேர்ச்சி பெறுவது அவசியம்.
இதனால் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வானது இரண்டு கட்டமாக நடத்தப்பட இருக்கின்றது. இதில் முதல் கட்ட தேர்வு நாளை தொடங்க இருக்கிறது. நாளை தொடங்கும் தேர்வு வருகின்ற 31ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதில் ஒன்பது லட்சம் பேர் பதிவு செய்துள்ளதால் 8 முதல் 9 லட்சம் வரை தேர்வில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து இரண்டாம் கட்ட ஜே இ இ நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கிறது. முதல் தேர்வில் பங்கேற்க இயலாதவர்கள் இரண்டாம் கட்ட தேர்வில் பங்கேற்கலாம்.
இந்நிலையில் ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடைபெறும் நாட்களில் சில சிபிஎஸ்சி பள்ளிகளில் செய்முறை தேர்வு நடக்க இருக்கிறது. இதனால் நுழைவு தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் செய்முறை தேர்வு என்ன செய்வது என்று தவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
நுழைவுத் தேர்வு நடக்கும் தேதிகளில் சிபிஎஸ்இ பள்ளிகளில் நடக்க இருக்கும் செய்முறை தேர்வினை தள்ளி வைக்க கோரிக்கைகள் எழுந்து வருகிறது. சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்ச்சிக்கு செய்முறை தேர்வு மதிப்பெண்ணும் அவசியம் என்பதால் ஜேஇஇ நுழைவுத் தேர்வு தேதிகளில் செய்முறை தேர்வு நடத்தாமல் வேறு தேதிகளுக்கு மாற்றி வைக்கும் படி கோரிக்கைகள் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளன.