ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்! ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் இவரா? முன்னாள் வீரரின் ஆலோசனை

0
180

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்! ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் இவரா? முன்னாள் வீரரின் ஆலோசனை 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்க்கு பதிலாக வேறு ஒரு வீரரை ஆட வைக்குமாறு முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணியானது 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டியானது வருகின்ற பிப்ரவரி ஒன்பதாம் தேதி நாக்பூரில் தொடங்க இருக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 17-21 வரை டெல்லியிலும், 3-வது டெஸ்ட் மார்ச் 1 முதல் 5 வரை தர்மசாலாவிலும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 9 முதல் 13 வரை அகமதாபாத்திலும் நடக்க இருக்கிறது.

டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்ததும் ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19 மற்றும் 22-ந்தேதிகளில் மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடமும் வகிக்கின்றன. இந்திய அணியானது இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் ஆஸ்திரேலிய அணியுடன் வெற்றி பெற்றே தீர வேண்டும். 

இதனால் இந்திய அணி வீரர்கள் நாக்பூரிலும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பெங்களூருவிலும் தங்கள் பயிற்சியினைத் தொடங்கிவிட்டனர். இந்திய அணி வீரர்கள் இன்று பயிற்சியை தொடங்கி ஈடுபடும் காட்சியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விளையாட மாட்டார் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

இதையடுத்து டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவில்லை எனில் அவருக்கு பதில் சூர்யாவை விளையாட வையுங்கள் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது,

ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டிக்கான உடல் தகுதியை அடையவில்லை எனில் அவருக்கு பதில் அந்த இடத்தில் சூரியகுமார் யாதவ் அல்லது சுப்மன் கில்  விளையாட தயார் நிலையில் உள்ளனர். என்னைப் பொறுத்தவரை நான் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதில் சூரியகுமார் யாதவை விளையாட வைப்பேன். இவர் சுழற்பந்து வீச்சை சிறப்பாக ஆடக்கூடிய வீரர். ஏனெனில் நாம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடிய ஆடுகளங்களில் விளையாட இருக்கிறோம். தற்போது சூரியகுமார் நல்ல பார்மில் உள்ளார்.  என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

Previous articleஇலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி! கூட்ட நெரிசலில் 4 பெண்கள் பலி! 
Next articleபள்ளிக்கு 10 மணிக்கு முன்பாக வரவில்லை என்றால் ஆசிரியர்கள் சம்பளம் கட்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!