சுஜித்தை அடுத்து ஆழ்துளை கிணற்றில் மீண்டும் ஒரு சிறுமி: அதிர்ச்சி தகவல்
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்து நடுக்காட்டுப்பட்டி என்ற பகுதியை சேர்ந்த 2 வயது சிறுவன் சுஜித் கடந்த வாரம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் மீட்புக்குழுவினர் ஐந்து நாட்களாக சுஜித்தை மீட்க போராடி இறுதியில் பிணமாகவே மீட்டனர். இந்த துயர சம்பவத்திற்கு பின் இனியொரு குழந்தை இதேபோல் உயிரிழந்துவிடக்கூடாது என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது
இதனையடுத்து விழிப்புணர்ச்சி ஏற்பட்ட பொதுமக்கள் தாங்களாகவே மூடப்படாமல் இருந்த பல ஆழ்துளை கிணறுகளை மூடினர். தனியார் அமைப்புகளும் இதற்கு நிதியுதவி செய்ய முன்வந்தன என்பது குறிப்பிடத்தக்கது
எனவே சுஜித் மரணத்தால் மக்களும் அரசும் விழிப்புணர்வு அடைந்தது என்பதால் பொதுமக்கள் நிம்மதியாக இருந்தனர். ஆனால் நேற்று ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹர்சிங்பூரா என்ற கிராமத்தில் ஐந்து வயது சிறுமி ஒருவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டதாக வெளிவந்துள்ள செய்தி இன்னும் சுஜித்தின் மரணத்தால் நாட்டு மக்கள் பாடம் கற்கவில்லை என்பதையே உணர்த்துகிறது
இந்த குழந்தையை உயிருடன் மீட்க ஹரியானா மாநில அரசும், அந்த பகுதி பொதுமக்களும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். மீட்புப்படையினர், காவல்துறையினர் மீட்புப்பணியை தொடங்கிவிட்டதாகவும், எப்படியும் இந்த சிறுமியை உயிருடன் மீட்டுவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.