பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்த நீதியரசர் உடல்நலக்குறைவால் காலமானார்!!

Photo of author

By Parthipan K

பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ. ஆர். லட்சுமணன் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ. ஆர். லட்சுமணன் (வயது 78). சாதாரண வழக்கறிஞராக தன் வாழ்க்கையை தொடங்கிய இவர், சிறிது காலத்திற்குப் பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், ராஜஸ்தான், ஆந்திரா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

மேலும், இவர் சட்ட ஆணையத்தின் தலைவராகவும், முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இடம் பெற்றிருந்தவர். அதுமட்டுமல்லாமல் பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்த நீதியரசர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஏ.ஆர்.லட்சுமணனின் மனைவி மீனாட்சி ஆச்சி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இந்நிலையில், நேற்று இரவு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.