பஞ்சாப் ராணுவ முகாமில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம்! சுட்டது யார் அதிகாரிகள் விசாரணை!!

Photo of author

By Rupa

பஞ்சாப் ராணுவ முகாமில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம்! சுட்டது யார் அதிகாரிகள் விசாரணை!!

கடந்த புதன்கிழமை அதிகாலை பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் இரண்டு தமிழக வீரர்கள் உட்பட நான்கு பேர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.

சம்பவம் நடைபெற்ற அன்று அதிகாலை துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் பாதுகாப்பில் இருந்த வீரர்கள் சத்தம் கேட்ட இடத்தில் சென்று பார்த்தபோது உறங்கி கொண்டிருந்த நான்கு வீரர்கள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். உடனே இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிய படுத்தப்பட்டு அப்பகுதி முழுவதும் பலத்த ராணுவ பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்து போன வீரர்களில் இருவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் அதில் ஒருவர் தேனி மாவட்டம் லோகேஷ் குமார் என்பதும் ,மற்றொருவர் சேலம் மாவட்டம் வனவாசி கமலேஷ் என்பதும் தெரிய வரவே அவர்களின் உடல்கள் இன்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மேலும் இந்த சம்பவம் குறித்து இரண்டு விதமான தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

முகம் முழுவதும் வெள்ளை துணி அணிந்த இருவர் நான்கு வீரர்கள் தூங்கி கொண்டிருந்த அறையில் புகுந்து கண்மூடி தனமாக சுட்டுவிட்டு காட்டுக்குள் தப்பி ஓடி விட்டனர் என்றும், சக வீரர்கள் இருவர் சுட்டுள்ளனர் என்ற தகவல் பரவி வருவதால், ராணுவத்தின் அதிகார பூர்வ தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என்பதால் மேஜர் அசுதேஷ் சுக்லா புகாரின் பேரில் பஞ்சாப் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு ஐபிசி 302 கொலை மற்றும் ஆயுத பிரிவு சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் காவல்துறையினர் கூறுகையில், இது தீவிரவாத தாக்குதல் இல்லை துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது இதுவரை தெரியவில்லை தொடர்ந்து அதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும், இந்த நால்வரை தவிர மற்ற வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்சாஸ் என்ற அதிநவீன துப்பாக்கியும், அதற்கான 28 தோட்டாக்களும் காணாமல் போனதற்கு இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த சம்பவம் குறித்து வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என ராணுவத்தின் செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.