8 லட்சம் பேர் வீதியில் இறங்கி போராட்டம்: பிரான்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பு
பிரான்ஸ் நாட்டின் புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வூதிய வயது வரம்பு 62 லிருந்து 64 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சேவை காலத்தை பொருத்து ஓய்வூதிய தொகை மாறுபடும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அதாவது ஓய்வூதிய வயது 64 வயதுக்கு முன்னரே ஓய்வு கோரினால் ஓய்வூதியத் தொகை வேறுபடும் என்றும் அரசு அறிவித்துள்ளது
பிரான்ஸ் அரசின் இந்த அறிவிப்புக்கு அந்நாட்டின் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்து வருகின்றன. நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், என பல்வேறு துறையினர் சுமார் 8 லட்சம் பேர் ஒரே நாளில் ஒரே இடத்தில் குவிந்து வீதியில் இறங்கி போராடியதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
இந்த போராட்டம் காரணமாக முக்கிய நகரங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக உலகின் முன்னணி சுற்றுலா தலங்களில் ஒன்றும் உலக அதிசயங்களில் ஒன்றுமான ஈஃபில் டவருக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத வகையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி முயற்சி செய்ததாகவும் ஆனாலும் போலீசாரின் இந்த முயற்சி பலிக்கவில்லை என்றும் தொடர்ந்து அந்நாட்டில் போராட்டம் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.