தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நல்ல நட்பை ஏற்படுத்தும் வகையில் 1993 ஆம் ஆண்டு பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அமைப்பு முதன்முதலாக ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ள காவலர்கள் வாகன தணிக்கை, குற்றம் நடைபெறும் இடம் குறித்த தகவல், குற்றவாளிகள் பற்றிய தகவல்களை வழங்கி வந்தனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மீது கடும் எதிர்ப்பு வலுத்தன. மேலும் இந்த வழக்கில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவத்திற்கு பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பட அம்மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தடைவிதித்தார். இதைத் தொடர்ந்து திருச்சி, கரூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த அமைப்பு செயல்பட வாய்மொழி உத்தரவாக தடை செய்யப்பட்டது.
மேலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தமிழகம் முழுவதும் தடை செய்யுமாறு தமிழக டிஜிபி திரிபாதி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து பிரண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு தமிழக அரசு தடைவிதித்தது. மக்களிடையே எதிர்ப்பினை சந்தித்த அமைப்புக்கு சாத்தான்குளம் சம்பவத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.