மயிலாடுதுறை அருகேயுள்ள வில்லியநல்லூர் கிராம இளைஞர்கள் ஊரடங்கால் பிரிந்து கிடந்தவர்கள் பொழுது போகாமல் ஒன்று சேர்ந்தனர். என்ன செய்யலாம் என்று யோசித்தவர்கள் பிரியாணி செய்து சாப்பிடலாம் என திட்டமிட்டனர்.
பிரியாணி என்றதும் மேலும் இருபது பேர் கூட்டணியில் சேர்ந்து கொண்டனர். உடனே, ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்த வாய்க்கால் மதகு ஓரமாக தடபுடலாகப் பிரியாணி தயாரானது.
அந்த நண்பர்கள் அனைவரும் கூட்டாக அமர்ந்து சமூக இடைவெளி விடாமல் ருசித்துள்ளனர். அதனை அப்படியே வீடியோவாக எடுத்தவர்கள் பெருமை பீற்றிக்கொள்ளும் விதமாக டிக்டாக்கில் பதிவிட்டனர்.
ஊரடங்கு சமயத்தில் சமூக விலகலை கடைபிடிக்காமல் இவர்கள் பிரியாணி விருந்து சாப்பிட்டு அதை டிக் டாக்கிலும் வலம்வர வைத்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தகவல் கிடைத்து விரைந்த காவல்துறையினர் மணல்மேடு காவல்துறையினர், கலைமணி, ராஜேஷ், வெங்கடேஷ், தினேஷ், சதீஷ்குமார், அரவிந்த், அருண், சிவா, பாலமுருகன், பாலச்சந்தர் ஆகிய 10 பேரைக் கைது செய்தனர்.
பிரிந்து கிடந்த நண்பர்கள் பிரியாணியை ருசிக்க ரூம் போட்ட இடத்தில் பிடித்த போலீசார் மற்றவர்களையும் தேடியும் வருகின்றனர்.