பிரதமர் மோடி முதல் இலங்கை அமைச்சர் வரை.. கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பது ஏன்?
மீனவர் மீது அக்கறை நாடகம் காட்டுவதாக பாஜக மீது திமுக குற்றம்சாட்டுவது ஏன்?
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய கட்சியான பாஜக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், எதிர்க்கட்சிகளை குறிவைத்து வாரிசு அரசியல் உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தற்போது இதன்ஒரு பகுதியாக தற்போது எழுந்திருக்கிறது கச்சத்தீவு விவகாரம்.
கச்சத்தீவு குறித்த தகவல்களை ஆர்.டி.ஐ மூலம் பெற்றதாக அண்ணாமலை தெரிவித்த நிலையில், அதனை பிரதமர் மோடியும் கையில் எடுத்தார். கச்சத்தீவை காங்கிரசும், திமுகவும் இலங்கைக்கு தாரை வார்த்ததாக தெரிவித்திருந்தார். அதேபோல வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், கச்சத்தீவை அப்போதைய காங்கிரஸ் அரசு இலங்கைக்கு தாரை வார்த்தது குறித்து தமிழ்நாட்டில் ஆட்சி செய்த திமுக அரசுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்று கூறியிருந்தார்.
பாஜக தரப்பின் இந்த அதிரடியான விமர்சனங்களுக்கு காங்கிரஸ், திமுகவும் பதிலடி கொடுத்தனர். அண்மையில் இதுபற்றி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பத்தாண்டுகளாக கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு தேர்தலுக்காக திடீர் மீனவ பாசத்தை நாடகத்தை பாஜக நடத்துவதாக கடுமையாக சாடியிருந்தார்.
அதேபோல் அண்ணாமலை வரலாறு தெரியாமல் பேசி வருவதாக திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்திருந்தார். “கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது தவறு என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் கலைஞர் கருணாநிதி” என்று குறிப்பிட்டிருந்தார்.
” 10 ஆண்டுகள் ஆட்சி காலத்தில் ஏன் கட்சத்தீவை மீட்டெடுக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் தமிழா நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை.
இருதரப்பும் மாறிமாறி விமர்சனம் வைத்துவரும் இந்த சூழலில் இலங்கையின் கருத்து என்ன? என்ற கேள்வி இருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் விளக்கம் அளித்துள்ளார்.
கச்சத்தீவை ஒப்படைப்பது குறித்து இந்திய அரசிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என்றும், அப்படி கோரிக்கை வந்தால் இலங்கை வெளியுறவுத்துறை பதில் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் கச்சத்தீவு இன்னும் இலங்கை வசம் தான் இருப்பதாகவும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
இலங்கை வரை கச்சத்தீவு விவகாரம் எதிரொலித்தாலும் இந்தியாவில் தற்போது நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.