ராமேஸ்வரம் முதல் காசி வரை! மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம்! தமிழக அரசு அறிவிப்பு! 

Photo of author

By Rupa

 

மூத்த குடிமக்களாக இருக்கும் 60 வயது முதல் 70 வயதுள்ள நபர்களை ராமேஸ்வரம் முதல் காசி வரை இலவச ஆன்மீக பயணம் அழைத்து செல்லவுள்ளதாக தமிழக அரசு தற்பொழுது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

தமிழக அரசு தற்பொழுது ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பெண்களின் முன்னேற்றத்திற்கும் கல்விக்கும் வேலை வாய்ப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதை போல ஆன்மீகத்திற்கும் தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

தமிழகத்தில் திமுக கட்சியின் தலைமையிலான ஆட்சி அமைந்ததும் அறநிலையத்துறைக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் 6703 கோடி ரூபாய் மதிப்புள்ள 805 கோயில்களின் 6853 ஏக்கர் நிலம் அரசு கைப்பற்றியுள்ளது.

கோயில்கள் புனரமைப்பு செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்துவது, அன்னதான கட்டிடம் கட்டுவது, ரோப் கார் வசதி ஏற்படுத்தி தருவது, கோயில்களில் திருமண மண்டபம் கட்டுவது போன்ற பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதே போல அறநிலையத்துறை சார்பாக இலவச ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்வதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆடி மாதம் பிறந்ததை அடுத்து ஆடி மாதத்தில் ஒரு நாள் ஆடி அம்மன் சுற்றுலா  திட்டம் என்பதை சுற்றுலாத் துறையும் அறநிலையத்துறையும் இணைந்து உருவாக்கி பக்தர்களை தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த திட்டம் பக்தர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்ததாக புரட்டாசி மாதம் ஸ்பேசலாக பக்தர்கள் அனைவரும் பெருமாள் கோயில்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதற்கு மண்டலங்கள் பொறுத்து குறிப்பிட்ட கட்டணமும் வசூலிக்கப்பட்டது.

இதே போல மூத்த குடிமக்களுக்காக தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை ஏற்படுத்தியது. அதாவது மூத்த குடிமக்கள் அனைவரும் வாழ்நாளில் காசி மற்றும் ராமேஸ்வரத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். பணம் அதிகம் உள்ளவர்கள் எளிமையாக சென்று வருவார்கள்.

பணம் குறைவாக இருக்கும் நபர்கள் இரண்டு இடங்களையும் ஒரே நேரத்தில் காணமுடியாது. எனவே மூத்த குடிமக்களுக்காக தமிழக அரசு இலவச ராமேஸ்வரம் காசி ஆன்மீக பயணத் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தது. இந்நிலையில் 25000 ரூபாய் மதிப்பிலான இந்த ஆன்மீக பயணம் இலவசமாக ஏற்பாடு  செய்யப்பட்டு முதல் கட்டமாக 2022-23ம் ஆண்டுக்கான திட்டத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு 200 நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த திட்டத்திற்காக தமிழக அரசு 50 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்திருந்தது. இதையடுத்து நடப்பாண்டு ராமேஸ்வரம் காசி ஆன்மீக இலவச பயணத்தில் 300 பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து தற்பொழுது இது குறித்து புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

அதன்படி 2024-25ம் ஆண்டில் 420 நபர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இந்து அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள 20 ஆணையர் மண்டலங்களில் இருந்து மண்டலத்திற்கு 21 பேர் வீதம் 420 பேர் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராமேஸ்வரம் முதல் காசி வரையிலான ஆன்மீக பயணத்தில் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சேர்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் 60 முதல் 70 வயதுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். இவர்கள் அனைவரும் விண்ணபிக்கலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த இலவச ராமேஸ்வரம் காசி ஆன்மீக பயணத் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதற்கான விண்ணப்பத்தை அருகில் இருக்கும் மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.hrce.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த ராமேஸ்வரம் முதல் காசி வரையிலான இலவச ஆன்மீக திட்டத்திற்கான விண்ணப்பப் பதிவு வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. மேலும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் பக்தர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.