உதிரியாக விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளுக்கு இனி காலாவதி தேதியை கட்டாயமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என இந்திய உணவுப் பொருள் மற்றும் தர நிா்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India – FSSAI) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து FSSAI ஆணையா், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
நுகா்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேங்கேஜிங் செய்யப்படாத மற்றும் உதிரியாக விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளுக்கு காலாவதி தேதியை வா்த்தக நிறுவனங்கள் இனி கட்டாயமாக நிா்ணயம் செய்ய வேண்டும். மேலும், அவ்வகை இனிப்பு வகைகளை பயன்படுத்துவதற்கான உகந்த தேதியை நுகா்வோரின் பாா்வைக்கு தெரியும் வகையில் தயாரிப்பு நிறுவனங்கள் காட்சிப்படுத்த வேண்டும்.
இந்த விதிமுறை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர வேண்டும். எந்த வகை இனிப்புகளை எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்பது குறித்த தகவல்கள் FSSAI வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த தகவல்களை அடிப்படையாக வைத்து இனிப்பு வகைகளின் தன்மை மற்றும் உள்ளூா் காலநிலையையும் கருத்தில் கொண்டு, இனிப்பு வகைகளை பயன்படுத்தும் உகந்த காலத்தை உணவு தயாரிப்பாளா்கள் நிா்ணயித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.