தமிழகத்தில் நோய்தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு அவர் ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.அதாவது தமிழ்நாட்டில் எதிர்வரும் பத்தாம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல் 24-ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு உத்தரவை அவர் பிறப்பித்திருக்கிறார். பத்தாம் தேதி காலை 4 மணி முதல் 24ஆம் தேதி காலை 4 மணி வரையில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது போடப்பட்டிருக்கும் இந்த முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல எல்லா உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேநீர் கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மளிகை மற்றும் காய்கறி இறைச்சி கடைகள் 12:00 மணி வரை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.அதேபோல பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்றவை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதோடு சாலையோர உணவகங்கள் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்படவில்லை, நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. காய்கறி விற்பனை செய்யும் நடைபாதை வியாபாரிகள் பகல் 12 மணி வரை வியாபாரம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது. தற்போது நடந்து வரும் கட்டட பணிகள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு அத்தியாவசிய பொருட்கள் தயார் செய்யும் தொழிற்சாலைகள் பகல் 12 மணி வரையில் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எல்லா தனியார் அலுவலகங்களும் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு அத்தியாவசியத் துறைகளாக இருக்கும் துறைகளை தவிர்த்து மாநில அரசின் அலுவலகங்கள் எதுவும் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு அலுவலகங்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
அதேபோல இன்றும், நாளையும், எல்லா விதமான கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தொலைத்தொடர்பு மற்றும் அதனை சார்ந்த செயல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல மாவட்டங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வாடகை கார்கள் ஆட்டோக்கள் போன்றவை இயங்குவதற்கும் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்தியாவசிய பணிக்கு செல்வோர் அதற்கான ஆவணங்களுடன் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல வங்கிகள், ஏடிஎம் மையங்கள் காப்பீடு நிறுவனங்கள் போன்றவைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் முடி திருத்தும் கடைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உடற்பயிற்சிக் கூடங்கள், தியேட்டர்கள் மற்றும் கூட்ட அரங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மூத்த மற்றும் சில்லறை காய்கறி வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.