மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் பற்றிய முழு விவரம் : யாருக்கு எல்லாம் உதவித்தொகை?

0
151

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் பற்றிய முழு விவரம் : யாருக்கு எல்லாம் உதவித்தொகை?

 

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குறித்து நாம் இங்கு விரிவாக பார்க்கலாம் :

 

தற்போது, பாரம்பரிய தொழில் கலைஞர்களின் நலனுக்கான பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்க விஸ்வகர்மா திட்டம், பிரதம மந்திரி இ-பஸ் சேவை, 2,339 கி.மீ. தூரத்திற்கான ரயில்வே வழித்தடங்கள், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் விரிவாக்கம் உள்பட பல திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

 

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் :

 

பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு கடனுதவி, திறன் மேம்பாடு அளிக்கும் இத்திட்டத்துக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

இத்திட்டத்தின் கீழ், கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை, ரூ.1 லட்சம் (முதல் தவணை) வரை வட்டியில்லாக் கடன் உதவி மற்றும் ரூ.2 லட்சம் (இரண்டாம் தவணை) 5% சலுகை வட்டி விகிதத்துடன் கடன் வழங்கப்படும்.

 

திட்டத்தின் சிறப்பு:-

 

மேலும், இத்திட்டத்தில் சேர விரும்புபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும். அடிப்படை பயிற்சி முதல் மேம்பட்ட பயிற்சி வரை இதில் வழங்கப்படும். அதோடு, நவீன உபகரணங்களை வாங்க ரூ.15 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.

 

இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் பலனடைவார்கள்.

 

இத்திட்டம் விஸ்வகர்மா ஜெயந்தியை (செப்டம்பர் 17) முன்னிட்டு நடைமுறைப் படுத்தப்படும் என தனது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

 

விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பயன்பெரும் 18 பாரம்பரிய தொழில்கள் :-

 

தச்சு வேலை, படகு தயாரிப்பு, இரும்புக் கொல்லர். ஆயுதங்கள் தயாரிப்பு, சுத்தியல் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பு, பூட்டு தயாரிப்பு. பொற்கொல்லர். மண்பாண்டக் கலைஞர், சிற்பி, கல் உடைப்பவர், காலணி தைக்கும் கலைஞர். கொத்தனார். கூடை பாய் – துடைப்பம் – தேங்காய் நார் மூலம் கால்மிதியடி தயாரிப்போர். பொம்மை கலைஞர்கள். முடிதிருத்துவோர், பூ மாலை தயாரிப்பவர், சலவை தொழிலாளர், தையல் கலைஞர், மீன்பிடி வலை தயாரித்தல் ஆகியவை ஆகும்

 

விஸ்வகர்மா திட்டத்தில், இணைந்து சிறு தொழிலாளர்களும், சிறு தொழில் முனைவோர்களும் பயனடையும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Previous articleதமிழகத்திற்கு ஏன் காவிரி தண்ணீர்?  எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர்கள்!!
Next articleஅரசு வாகனமா?  இல்லை திமுக பிரமுகர் வாகனமா?