இசைஞானி இளையராஜாவின் பாடல்களை திரைப்படங்களிலும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அப்படி பயன்படுத்தப்படும்போது தன்னுடைய அனுமதி வாங்க வேண்டும். இல்லையேல் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகிறார் இளையராஜா. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா படத்தில் இடம் பெற்ற கண்மணி பாடல் பயன்படுத்தப்பட்டதற்கும் ராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். தற்போது குட் பேட் அக்லி பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
இந்த படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல், ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி, இளமை இதோ இதோ போன்ற பாடல்களை குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். 5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும், படத்தில் தன்னுடைய பாடல்களை பயனடுத்துவதை நிறுத்தவேண்டும் எனவும், 7 நாட்களுக்குள் படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், இளையராஜாவின் நோட்டீஸுக்கு விளக்கமளித்துள்ள குட் பேட் அக்லி பட நிறுவனம் ‘காப்புரிமை வைத்திருக்கும் சம்பந்தப்பட்ட நிறுவங்களிடம் அனுமதி வாங்கியே குட் பேட் அக்லி படத்தில் பாடல்களை பயன்படுத்தி இருக்கிறோம். முறையாக என்.ஓ.சி வாங்கியிருக்கிறோம்’ என விளக்களித்துள்ளனர். இதையடுத்து இளையராஜாவுக்கு பணத்தாசை என சிலர் விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஒரு விழாவில் பேசிய இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் ‘நீங்கள் 7 கோடி கொடுத்து இசையமைப்பாளர் போடும் பாட்டு ஹிட் அடிக்கவில்லை. எங்களின் பாடல்கள்தான் ஹிட் ஆகிறது. குட் பேட் அக்லி படத்தின் ஹிட்டுக்கு அந்த பாடல்களும் ஒரு காரணம். அப்படியெனில் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் இல்லையா?.. எங்களுக்கு காசு ஆசையெல்லாம் இல்லை. பணம் கொட்டிக் கிடக்கிறது. அண்ணனிடம் அனுமதி கேட்டால் அவர் கொடுப்பார். கேட்காமல் பயன்படுத்துவதால்தான் கோபப்பட்டு அவர் நோட்டீஸ் அனுப்புகிறார். அன்னக்கிளி பாடல் சூப்பர் ஹிட். ஆனால், எங்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால்தான் படம் துவங்கும்போது பாடல்களின் உரிமையை அண்ணன் தயாரிப்பாளரிடம் எழுதி வாங்க துவங்கினார்’ என பொங்கியிருக்கிறார்.