உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே கடந்த 24 ஆம் தேதியிலிருந்து கடுமையான போர் நடைபெற்று வருகிறது.இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் கச்சா எண்ணெய் விற்பனையில் ரஷ்யா 2வது இடம் வகிக்கிறது.அவ்வாறு இருக்கும்போது உக்ரைன் மீதான போரை கண்டிக்கும் விதமாக அமெரிக்கா ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதாரத் தடையை விதித்தது.
அதோடு இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தனர்.இதனை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரக்கூடும் என்று அஞ்சப்பட்டு வந்தது.
இந்த சூழ்நிலையில், சென்னையில் சுமார் 137 நாட்களுக்கு பிறகு இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 76 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 16 காசுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 76 காசுகள் அதிகரித்து 92 ரூபாய் 19 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தொடர்ந்து பல மாதங்களுக்குப் பிறகு தலைநகர் சென்னையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது சென்னையில் கடந்த 5 மாத காலமாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த சூழ்நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு தற்சமயம் சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது அதனடிப்படையில் சென்னையில் இன்று வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்து 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த விலை உயர்வு காரணமாக, இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வையடுத்து வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரிக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள்.