தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு! சவரனுக்கு 2000 குறைவு! மேலும் குறையுமா?
சமீப காலமாக தங்கத்தின் விலையானது ஏற்றம் இறக்கமாகவே காணப்படுகிறது.இந்நிலையில் கடந்த 4 நாட்களாக இறங்கு முகமாக காணப்பட்ட தங்கத்தின் விலையானது நேற்று ஏற்றம் கண்டது. ஆனால் இந்த விலையேற்றமானது ஒருநாள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் இன்று விலை குறைந்துள்ளது.
இன்று தங்கத்தின் விலையானது கிராமுக்கு 40 ரூபாயும் சவரனுக்கு 320 ரூபாயும் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,676 க்கும், சவரன் ரூ.37,408 க்கும்விற்பனையானது .
அதே நேரத்தில் இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு ரூ.40 விலை குறைந்து தற்போது ரூ4,636 ஆகவும், மேலும் சவரனுக்கு ரூ.320 சரிந்து தற்போது 1 சவரன் ரூ.37,088 க்கும்விற்பனையாகி வருகிறது.
சென்னையை போலவே மற்ற மாநகரங்களான கோவை, திருச்சி மற்றும் வேலூரில் தங்கம் கிராம் ரூ.4635 என்ற விலையில் விறபனையாகி வருகிறது.கடந்த 4 நாட்களாக சரிந்து வந்த தங்கத்தின் விலையானது நேற்று சற்றே ஏற்றம் கண்டது.ஆனால் இன்றும் மீண்டும் விலை குறைந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக கடும் ஊசலாட்டத்துடன் காணப்படும் தங்கத்தின் விலையானது கடந்த 2 வாரங்களில் மட்டும் 2000 ரூபாய்க்கும் மேல் விலை சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதே போல வெள்ளி கிராம் ஒன்றுக்கு 1.90 காசு குறைந்து, ரூ.60.40 க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.1900 குறைந்து, ரூ.60,400 க்கும் விற்பனையாகி வருகிறது.
அமெரிக்காவில் கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கமானது 9.1 சதவீதமாக உயர்ந்து விட்டது. இவ்வாறு தொடர்ந்து அதிகரி்த்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கெனவே இருமுறை வட்டிவீதத்தை உயர்த்திவிட்டது. இந்நிலையில் இந்த மாத இறுதியில் மீண்டும் 100 புள்ளிகள் வரை வட்டியை உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் மீண்டும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் டாலரின் மதிப்பு உயர்ந்து இந்தியா உள்ளிட்ட மற்ற நாட்டுக் கரன்சிகளின் மதிப்பானது குறைய வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் அனைவரும் பாதுகாப்பு மற்றும் லாப நோக்கம் கருதி தங்கத்தில் முதலீடு செய்வதை விட டாலரில் முதலீடு செய்வது அதிகரிக்கும்.
மேலும் தங்கள் நாட்டு கரன்சி மதிப்பை கட்டுக்குள் வைத்துக் கொள்ள டாலரில் வாங்கும் தங்க இறக்குமதியில் கட்டுப்பாடு விதிக்கவும் வாய்ப்புண்டு.இதனால் சர்வதேச அளவில் தங்கத்திற்கான தேவை குறைந்து மேலும் விலை சரியவும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் மத்திய அரசு தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த தங்கத்துக்கான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளதும் தங்கம் விலை குறைவுக்கு காரணியாகக் கருதப்படுகிறது.