தாலிக்குக் தங்கம் தருவது போன்ற திட்டம் போல தமிழக அரசு தற்பொழுது உதவித் தொகையுடன் கூடிய சிறப்பான திட்டம் ஒன்றை தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது. அதன்படி 50000 வரை உதவித் தொகையும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
திமுக தலைமையிலான தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல வகையான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டங்களும் பெண்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகின்றது.
அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலமாக தமிழக அரசு பெண்களுக்கு மாதம் 1000 ரூபாயை அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைத்து வருகின்றது. மாதம் 1000 ரூபாய் என்பதை விட வருடம் சேர்த்து வைத்து பார்க்கும் பொழுது 12000 ரூபாய் சேரும் என்பதால் இது சிறப்பான திட்டமாக பார்க்கப்படுகின்றது.
இதே போல விடியல் பயணம் என்ற திட்டம் மூலமாக பெண்களுக்கு தமிழகத்தில் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன். மூலமாக பெண்கள் மாதம் 1500 ரூபாய் சேமிக்க முடிவதாக கூறப்படுகின்றது.
இந்த திட்டங்களை போலவே புதுமைப் பெண் என்ற திட்டம் மூலமாக அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டம் மூலமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு 18000 ரூபாய் வரை உதவித் தொகை மற்றும் 2000 ரூபாய் மதிப்பிலான பரிசு பெட்டகம் வழங்கப்படுகின்றது.
அதே போல கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண்கள் ஆகியோர் சொந்தமாக தொழில் தொடங்க 50000 நிதியுதவி அளிக்கப்பட்டு வருகின்றது. இதே போல மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டமானது தற்பொழுது மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி திட்டமாக மாற்றப்பட்டு உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்பொழுது தமிழக அரசு திருமணம் ஆகப் போகும் பெண்களுக்கு உதவிடும் வகையில் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி இருக்கின்றது.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் தொகை திட்டம் என்ற புதிய திட்டம் மூலமாக திருமணம் ஆகப் போகும் பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் 25000 ரூபாய் முதல் 50000 ரூபாய் வரை உதவித் தொகையும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
இந்த திட்டம் இரண்டு வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது எந்தவொரு படிப்பும் படிக்காத பெண்களுக்கும் பின்பு படித்த பெண்களுக்கும் என்று இரண்டு வகையில் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் படிக்காத பெண்களுக்கு 25000 ரூபாய் உதவித் தொகையும் 8 கிராம் தங்கமும் பட்டப்படிப்பு வரை படித்த பெண்களுக்கு 50000 ரூபாய் உதவித் தொகையும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
25000 ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கு படிக்காத பெண்கள் எந்தவொரு சான்றிதழையும் காட்டத் தேவையில்லை. இரண்டாவது வகையில் அதாவது 50000 ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கு பட்டப் படிப்பு படித்த பெண்களும் டிப்ளமோ படித்த பெண்களும் தொலைதூர கல்வி மூலமாக படித்த பெண்களும் தகுந்த சான்றிதழ்களை காட்டி உதவித் தொகை பெற முடியும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
இந்த திட்டத்தில் உதவித் தொகை பெறுவதற்கு திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். இ சேவை மையம் மூலமாகவும் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். 18 வயது பூர்த்தி அடைந்த பெண்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயன் பெற முடியும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்ற உச்ச வரம்பு எதுவும் நியமிக்கப்படவில்லை. அதே போல குறைந்தபட்ச கல்வித் தகுதி என்று எதுவும் கூறப்படவில்லை. பெற்றோர்களால் கைவிடப்பட்ட மற்றும் பெற்றோர்களை இழந்த பெண்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள பெண்கள் ஆகியோரும் இந்த திட்டத்தில் பயன் பெற முடியும்.
இந்த அன்னை தெரசா திருமண உதவி திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுள்ள பெண்கள் சட்டமன்ற உறுப்பினர் அல்லது மக்களவை உறுப்பினரிடம் ஆதரவற்றோர் என்ற சான்றிதழ் வாங்கி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் தாய் மற்றும் தந்தை இறந்ததற்கான சான்றிதழ் காண்பிக்க வேண்டும். அதே போல வயது சான்றிதழ், திருமண அழைப்பிதழ், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முதலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் சமூகநலத்துறை அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் அங்கு அன்னை தெரேசா திருமண உதவி திட்டம் குறித்து கூறினால் அதற்கு விண்ணப்பிக்க ஒரு படிவம் ஒன்று வழங்கப்படும். அந்த படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை அதில் சேர்த்து அங்கு வழங்க வேண்டும். பின்னர் அதிகாரிகள் இந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்து தகுதி இருப்பின் அன்னை தெரசா திருமண உதவி திட்டம் மூலமாக உதவித் தொகை கிடைக்கும்.