Good Bad Ugly: விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் அடுத்து வரும் குட் பேட் அக்லி படம் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. ஏனெனில், இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.
இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது டிரெய்லர் வீடியோ வெளியாகி டபுள் டமாக்காவாக அமைந்திருக்கிறது. ஏனெனில், டீசரில் அமைந்ததை விட பல மடங்கு மாஸான காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றிருக்கிறது. மேலும், தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களிலும் வந்த அஜித்தின் லுக்கை இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். குட் பேட் அக்லி படம் வருகிற 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
பட ரிலீஸுக்கு 4 நாட்கள் முன்பே ஆன்லைன் புக்கிங் துவங்கியுள்ளது. இந்தியா முழுவதும் காலை 9 மணிக்கு முதல் காட்சி வெளியாகவுள்ளது. ஆனால், மதுரையில் முதல்நாள் முதல் காட்சி வெளியாகுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனெனில், மல்டிபிளக்ஸ் அல்லாத தனித்தியேட்டர்களில் ரூ.500க்கு டிக்கெட் விற்க வேண்டும் என வினியோகஸ்தர்கள் சொல்கிறர்கள். ஆனால், தியேட்டர் அதிபர்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லை. இதை ஏற்கவில்லை எனில் முதல் காட்சியை 12 மணிக்கு வெளியிடுங்கள் என வினியோகஸ்தர்கள் செக் வைத்துவிட்டார்கள். எனவே, தியேட்டர் அதிபர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பது தெரியவில்லை.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் மதுரையில் முதல் காட்சி காலை 9 மணிக்கும், இல்லையெனில் மதியம் 12 மணிக்கும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.