அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லில். ஏனெனில், பில்லா, மங்காத்தாவுக்கு பின் அது போன்ற படங்கள் வரவில்லை. அதிலும், கடைசியாக வந்த விடாமுயற்சி படம் ரசிகர்களை எந்தவகையிலும் திருப்திப்படுத்தவில்லை. அதாவது அஜித்துக்கான மாஸ் காட்சிகள் அதில் சுத்தமாக இல்லை. வில்லன் குரூப்பிடம் அஜித் அடிவாங்குவது போன்ற காட்சிகள்தான் இடம் பெற்றிருந்தது.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஏனெனில், பக்கா ஆக்சன் கேங்ஸ்டர் படமாக குட் பேட் அக்லி உருவாகியிருக்கிறது. இந்த படத்திற்கு முன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததால் குட் பேட் அக்லி மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. பல வருடங்களுக்கு பின் அஜித்தின் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்த நிலையில் 3வது சிங்கிள் வருகிற 7ம் தேதி வெளியாகவுள்ளது.
படம் வருகிற 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் பற்றிய தொடர் அறிவிப்புகளை வெளியிட்டு அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது படக்குழு. இந்நிலையில், டீசரே ரசிகர்களுக்கு முழு திருப்தியை கொடுத்த நிலையில் வருகிற 3ம் தேதியான இன்று அல்லது 4ம் தேதி குட் பேட் அக்லி படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகவுள்ளது.
இதற்கு முன் வந்த டீசரை பார்த்தவர்களுக்கு இது குடும்பத்துடன் போய் பார்க்கும்படியான படமாக இருக்குமா என்கிற சந்தேகம் எழுந்தது. ஏனெனில் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை மனதில் வைத்தே டீசர் வீடியோ உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது வரும் டிரெய்லரில் குடும்பத்துடன் பார்க்கலாம் என்கிற உணர்வை ஏற்படுத்தும் செண்டிமெண்ட் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. குட் பேட் அக்லி படம் வருகிற 10ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.