பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த மற்றும் சுயத் தொழிலை உருவாக்க பெண்களுக்கு ஆட்டோ வாங்க ஒரு லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று திமுக தலைமையிலான அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டசபையில் தெரிவித்தது.
இதையடுத்து கடந்த ஜூன் மாத சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சமூக நலன்
மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் சென்னை மாநகராட்சியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்,பெண்கள் சுயத் தொழில் தொடங்கவும் அரசு சார்பில் ரூ.1,00,000 மானியமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.தகுதி வாய்ந்த 200 பெண்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.1,00,000 மானியம் வழங்கப்படும் என்றும் இதற்காக ரூ.2 கோடி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.அரசின் இந்த அறிவிப்பு பெண்களிடையே மிகுந்த வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்காக அரசாணை அடுத்த வாரத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
தமிழக அரசு வழங்க உள்ள ரூ.1 லட்சம் மானியத்தை பெற பெண்கள் மற்றும் திருநங்கைகள் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
இதில் பதிவு செய்த 1000 பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.1,00,000 மானியம் வழங்கப்பட இருக்கிறது.இதற்கான அரசாணை இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தகுதி வாய்ந்த பெண்கள் மற்றும் திருநங்கைகள் தமிழக அரசிடம் இருந்து மானியம் பெற நல வாரியத்தில் விண்ணப்பிக்கலாம்.
தமிழகம் முழுவதிலும் உள்ள நலவாரியத்தில் பதிவு செய்த 1000 பெண்கள் மற்றும் திருநங்கைகள் மட்டுமே நடப்பு நிதியாண்டில் விண்ணப்பித்து பயன்பெற முடியும்.தற்பொழுது வரை 338 பெண்கள் மானியம் பெற விண்ணப்பித்து காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் தமிழக அரசின் மானியத்துடன் வங்கி கடன் பெற்று சொந்தமாக ஆட்டோ வாங்கி தொழில் தொடங்கலாம்.