மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்களுக்கான இனிய செய்தி! திட்டங்களைப் பதிவு செய்ய ஆன்லைன் வசதி!

Photo of author

By Jeevitha

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய அறிவிப்பாக மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்களுக்கு ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இனிவரும் காலங்களில் மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்கள் தங்கள் கட்டுமானத் திட்டங்களை இணையம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். இ சேவை மையங்களின் மூலமாக கட்டணங்களின் பேரில் ரியல் எஸ்டேட் துறையினர் நேரடியாக ஆணையத்திற்குச் செல்லாமல் பதிவு செய்து கொள்ள முடியும்.

மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்கள் தங்களின் கட்டுமான திட்டத்திற்கு ஏற்ப ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை தங்களின் பதிவு திட்டத்திற்கான கட்டணமாகச் செலுத்த வேண்டும். இனி இந்த கட்டணங்களை இணையம் வழியாகக் கூட செலுத்த முடியும்.

இல்லாவிடில் விற்பனை முனைய இயந்திரமானது தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த இயந்திரத்தின் வழியாக கட்டணங்களைச் செலுத்த முடியும். இந்த திட்டத்திற்காக ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலமாக ஆவணங்களை பதிவேற்றம் செய்து கொள்வது சாத்தியமாகும்.

மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்கள் தங்களின் கட்டுமானத் திட்டத்தில் சதுர அடியானது 5,381 என்ற அளவுக்கு அதிகமாக இருந்தால் அதனை ஆன்லைன் வழியாக பதிவு செய்யலாம் என்ற அறிவிப்பு குறித்து சில பிரச்சனைகள் எழும் என்று கூறி வருகிறார்கள்.

ஒவ்வொரு திட்டப்பணியின் நில மற்றும் கட்டிட அளவுமுறைகளின் அடிப்படையில் ஒவ்வொரு வகையான கட்டண அளவு வெளியிடப்பட்டு  உள்ளது. அதன்படி இரு ஹெக்டேருக்கு அதிகமான மனைப்பிரிவிற்கு பத்தாயிரம் ரூபாயும், இருபதாயிரம் சதுர மீட்டர் வரையுள்ள திட்டப்பணிக்கு ஆறாயிரம் ரூபாயும் கட்டணமாகக் கொடுக்க வேண்டும்.

மேலும் வீடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் கட்டணத்தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கட்டிட மேம்பாட்டாளர்களின் திட்டமானது நூறு வீடுகளுக்கு மேல் உள்ள பட்சத்தில் இருபத்தைந்தாயிரம் ரூபாயை கட்டணமாக செலுத்தலாம்.

இருபது வீடுகள் வரை மட்டும் இருப்பின் பத்தாயிரம் ரூபாயும், வீடுகளின் எண்ணிக்கை ஐம்பதுக்கு மேலும் நூறுக்கு கீழும் மற்றும் இருபத்து ஒன்று முதல் ஐம்பது வரை இருப்பின் முறையே ரூபாய் பதினைந்தாயிரம் மற்றும் பத்தாயிரத்தை கட்டணத்தொகையாக ஆன்லைன் வழியில் செலுத்துவது கட்டாயம்.