இயந்திரத்தில் மோதி நல்ல பாம்பு படுகாயம்! சிகிச்சை அளித்த தைரியசாலி பெண் மருத்துவர்!
சென்னை மாவட்டத்தில் கொரட்டூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுற்றி உள்ள பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது. அப்போது அங்கே சுமார் 5 அடி நீளமுள்ள இரண்டு நல்ல பாம்புகள் பதுங்கி இருந்தது. அதில் ஒரு பாம்பு அந்த இயந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்து விட்டது. ஆனால் மற்றொரு பாம்பு புதருக்குள் ஓடி ஒளிந்து விட்டது.
எனவே இது பற்றி தகவல் அறிந்த வேளச்சேரியை சேர்ந்த வனத்துறையினர் தனசேகர் தலைமையிலான வேட்டை தடுப்பு காவலர் வினோத் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பாம்புகளையும் தன் திறமையினால் லாவகமாக பிடித்து சென்றார். அதன் பின்னர் படுகாயம் அடைந்த அந்த நல்லபாம்பு வேளச்சேரி வனத்துறை காப்பகத்தில் உள்ள மருத்துவரிடம் காட்டி சிகிச்சையும் அளித்தார்கள்.
தற்போது பாம்பு பூரண குணமடைந்ததும் வனப்பகுதியில் விடப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று பழமொழி சொல்வார்கள். ஆனால் அந்த காயமடைந்த பாம்புக்கு பெண் மருத்துவர் ஒருவர் தைரியமாக முதலுதவி சிகிச்சை அளித்து உயிர் கொடுத்த சம்பவம் அனைவரிடத்திலும் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.