உரிய பணத்தை ‘கூகுள்’ நிறுவனம் அளிப்பதில்லை! ‘கூகுள்’ நிறுவனம் மீது புகார்!!
இந்திய பத்திரிக்கை அதிபர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மேரி பால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய செய்தி ஊடகங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்காக நாட்டு நடப்புகளை செய்திகளாக உருவாக்கி வெளியிடுகின்றன. அவை இணையத்தில் மின்னணு வடிவத்திலும் கிடைக்கப்பெறுகின்றன.
இணையத்தில் வெளியிடும் செய்திகளை ‘கூகுள்’ போன்ற தேடுபொருளை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். இதற்கிடையே செய்திகளை உருவாக்க ஊடகங்கள் ஏராளமான பணத்தை முதலீடு செய்கின்றன. எனினும், அந்த செய்திக்குரிய பணத்தை ‘கூகுள்’ நிறுவனம் அளிப்பதில்லை.
மேலும், ‘கூகுள்’ நிறுவனம் தான் விளம்பரங்கள் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் மற்றும் அதில் செய்தி ஊடக நிறுவனங்களுக்கு எத்தனை சதவீத பணம் கொடுக்கிறது போன்ற விவரங்களை செய்தி ஊடக நிறுவனங்களுக்கு ‘கூகுள்’ நிறுவனம் தெரிவிப்பது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதன் காரணமாக ‘கூகுள்’ நிறுவனத்துக்கு எதிராக இந்திய போட்டி ஆணையத்தில் இந்திய பத்திரிக்கை அதிபர்கள் சங்கம் புகார் மனுவை தாக்கல் செய்தது. இந்த புகாரை ஆராய்ந்த இந்திய போட்டி ஆணையம், இது போட்டி சட்டம் 2002-ஐ மீறிய செயல் என்பதை கண்டறிந்தது.
இதையடுத்து இந்த புகாரின் மீது விரிவான விசாரணை நடத்துமாறு இந்திய போட்டி ஆணையம் தனது தலைமை இயக்குனருக்கு உத்தரவிட்டது. மேலும், இந்திய பத்திரிக்கை அதிபர்கள் சங்கம் தாக்கல் செய்த புகாரையும், மின்னணு செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம் தாக்கல் செய்த புகாரையும் ஒன்றாக இணைக்குமாறும் உத்தரவிட்டது.