கிருஷ்ணகிரி டோல்கேட்டில் சுங்க கட்டணம் செலுத்தாததால், அரசு பேருந்துகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து பயணிகள் தங்கள் சொந்த பணத்தில் சுங்க கட்டணத்தை செலுத்திய பின்னர், பேருந்துகள் புறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் கோட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூர், பெங்களூருவுக்கு 30 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 7ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, நேற்று விழுப்புரம் கோட்டத்தில் இருந்து ஓசூருக்கு புறப்பட்ட அரசு பேருந்துகள் கிருஷ்ணகிரியை கடந்து சென்றன. அப்போது பேருந்துகளுக்கு சுங்க கட்டணம் செலுத்தாததால், பேருந்துகள் கடந்து செல்ல டோல்கேட் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதனால், பயணிகளை மாற்று பேருந்துகளில் ஓசூர் அனுப்பப்பட்டனர்.
அவ்வாறு நிறுத்தப்பட்ட 5 பேருந்துகளில், 3 பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் தங்களின் சொந்த பணத்தை கொண்டு சுங்க கட்டணம் செலுத்தினார்கள். அதன் பிறகு இந்த 3 பேருந்துகளும் புறப்பட்டுச் சென்றன. மேலும் 2 பேருந்துகள் சுங்க கட்டணம் செலுத்தாததால் மேற்கொண்டு செல்ல அனுமதிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த பிரச்னையால் பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளானார்கள்.
இதுகுறித்து அரசு பேருந்து ஓட்டுனர் கூறுகையில், ‘சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேசி விட்டோம், நீங்கள் பணத்தை கட்ட வேண்டாம் என கூறி, எங்களது அலுவலர்கள் அனுப்பி வைத்தனர். இதற்கான மின்னஞ்சல் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால் சுங்கச்சாவடியில் பணம் கட்டினால் மட்டுமே பேருந்துகளை செல்ல அனுமதிக்க முடியும் என டோல்கேட் ஊழியர்கள் கூறுகின்றனர். இதனால், வேறு வழியின்றி பயணிகளை மாற்று பேருந்துகளில் அனுப்பி வைத்தோம்,’ என்று கூறினர்.
இதுதொடர்பாக சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சுங்க கட்டணம் செலுத்தும்படி கூறி நாங்கள் பல முறை அறிவுறுத்தியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை, இருந்தாலும், 7 நாட்களாக பேருந்துகளை கட்டணமின்றி செல்ல அனுமதித்தோம். ஆனாலும் அவர்கள் கண்டு கொள்ளாததால் இன்று பேருந்துகளை நிறுத்தினோம்’ என்று கூறினர்.