90 வயது மூதாட்டியை சொந்த பேத்திகளே உயிருடன் எரித்து கொன்ற கொடூரம்!

Photo of author

By Sakthi

திருநெல்வேலி அருகே பேட்டை ஆதம்நகர் எதிரே கடந்த 3ஆம் தேதி பெண் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அந்த பெண் கொலையில் திடீர் திருப்பம் உண்டாகியிருக்கிறது. அதாவது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பழையபேட்டை கண்டியபேரியை சார்ந்த சுப்பம்மாள் என்ற 90 வயது மூதாட்டி என்பதும், அவரை பேத்திகள் 2 பேர் சேர்ந்து கொலை செய்திருக்கிறார்கள் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சுப்பம்மாள் மகள் வழி பேத்தி பேட்டை செக்கடியை சேர்ந்த லட்சுமணன் மனைவி மேரி, கிருஷ்ணகப்பேரியை சேர்ந்த பொன் அழகு மனைவி மாரியம்மாள், இதில் மேரி தன்னுடைய பாட்டி சுப்பம்மாள் அவர்களை சில வருடங்களாக பராமரித்து வந்தார்.

ஆனால் அவரால் தொடர்ந்து பராமரிக்க முடியாததால் தன்னுடைய சகோதரியான மாரியம்மாள் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டார். ஆனால் அவரும் பராமரிக்க சிரமப்பட்டு வந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து 2 பேரும் ஒன்றாக சேர்ந்து சிற்பம் மாலை கொலை செய்ய திட்டம் வகுத்தனர். அதன் அடிப்படையில் கடந்த 3ஆம் தேதி ஒரு ஆட்டோவில் சுப்பம்மாள் அவர்களை அழைத்துக்கொண்டு மேரி ,மாரியம்மாள், உள்ளிட்ட இருவரும் ஆதம்நகர் பகுதிக்குச் சென்றார்கள்

அதன்பிறகு ஆட்டோவை அங்கிருந்து அனுப்பி வைத்துவிட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அதன் பிறகு அந்த பகுதியில் இருக்கின்ற ஒரு ஒதுக்குப்புறமான பகுதிக்கு சுப்பம்மாளை அழைத்துக் கொண்டு இருவரும் சென்றிருக்கிறார்கள். இதன்பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து சுப்பம்மாள் மீது ஊற்றி உயிருடன் தீவைத்து எரித்து கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு இந்த சம்பவத்திற்கு பிறகு மாரியம்மாள் தான் வந்த ஆட்டோவை மீண்டும் வரவழைத்து அதில் ஏறி வீட்டிற்கு சென்றார். அதேநேரம் மேரி நடந்து தன்னுடைய வீட்டிற்கு சென்றிருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த கொடூர கொலை குறித்து மாரியம்மாள் மற்றும் மேரியை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.