என்னை எதிர்க்க பெரும் பயம்.. இந்த காரணத்தினால் தான் சின்னம் போனது!! சீமான் குற்றச்சாட்டு!!
விவசாய சின்னத்துடன் என்னை எதிர் கொள்ள பயம் எனவும், அதனால் தான் என் சின்னத்தை எடுத்து விட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்
மக்களவை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், நானா, நீயா என போட்டி போட்டுக் கொண்டு அரசியல் கட்சியினர் அனல் பறக்க பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
மைக் சின்னத்திற்கு வாக்களிக்க கோரி, பரப்புரை செய்து வரும் அவர், பலவித விமர்சனங்களையும் மக்கள் மத்தியில் பறைசாற்றி வருகிறார்.
அதன்படி, நாமக்கல் மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பரமத்தி வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட சீமான்,
அதிமுக, திமுகவுக்கே தொடர்ந்து ஓட்டு போடும் மக்கள், 15 ஆண்டுகாலமாக களத்தில் போராடும் எங்களை ரோட்டில் தூக்கி போட்டதை தவிர கவுன்சிலர், எம். எல்..ஏ. என எவ்வித அதிகாரத்தையும் தரவில்லை என வேதனை தெரிவித்தார்
இதையெல்லாம் கொடுக்கிறேன் என கூட்டணிக்கு அழைத்த பலர், பதவி, பணம் என ஆசை வார்த்தைகாட்டி தன்னை பணிய வைக்க முயன்றதாகவும், அதையெல்லாம் மறுத்துவிட்டு மக்கள் சேவைக்காக போராடி வறுகிறேன் என நெகிழ்ச்சி பொங்க சீமான் பெருமிதம் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் அவரவர் சின்னத்தில் போட்டியிடுகின்றனர் என குறிப்பிட்ட அவர், 70 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே சின்னத்தில் போட்டியிடும் கட்சிகளுக்கு மத்தியில்,
என்னுடைய விவசாயி சின்னம் மட்டும் எங்கே போனது என கேள்வி எழுப்பினார்.விவசாய சின்னத்துடன் தன்னை தேர்தலை சந்திக்க விடக் கூடாது என்ற பயம் தான் என் சின்னத்தை எடுக்க காரணம் என சாடினார்.
பாஜக முதலில் தமிழகத்தில் தேர்தல் நடத்த காரணம் என்ன தெரியுமா என நகைப்புடன் கேள்வி எழுப்பிய சீமான், பலவீனமாக இருக்கும் பகுதிகளில் கால்பதித்து பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் என சூசகமாக தெரிவித்தார்.
வாக்கு இயந்திரத்துக்குள் வேலையைக் காட்டி எப்படியாவது பாஜக வென்று விட்டதாக காட்ட வேண்டும் என்பதற்காகத்தான், மோடி ஓடி ஓடி வருவதாக சீமான் விமர்சித்தார்.