“தோட்டத்தம்மா தான் என்ன வளர்த்தாங்க” – எம். ஜி. ஆர் உடைய பேரன் நெகிழ்ச்சிப் பேட்டி! யார் அந்த தோட்டத்தம்மா?

Photo of author

By Gayathri

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர் நடிகர் “எம். ஜி. ஆர்”. நடிகராக மட்டுமில்லாமல், அரசியலிலும் களம் கண்டு வெற்றி பெற்ற மாமனிதர். இவர் நடித்த பல்வேறு படங்கள் பல கருத்துக்கள் நிறைந்தவையாக இருக்கும் என்பதால் மக்களுக்கு மிகவும் எளிதாகச் சென்றடையக்கூடிய வகையில் இருந்தது. இவரின் மனைவியான திருமதி. ஜானகி ராமச்சந்திரன் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஆவார்.

இவருடைய நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அவருடைய தம்பிவழிப் பேரனான வழக்கறிஞர் திரு. குமார் ராஜேந்திரன் தன்னுடைய பாட்டி ஜானகி அம்மாளுடன் இருந்த நினைவுகளைப் பற்றிப் பகிர்ந்துள்ளார்.

அவர், “என் பாட்டிக்குக் கோபமே வராது, அவங்க ஒரு கெட்ட வார்த்தை கூட பேசி நான் கேட்டதில்லை. அவங்க தம்பியோட முதல் பேரன்தான் நான். என்னோட அம்மா ரொம்ப சின்ன புள்ள அப்படிங்கறதுனால நான் பிறந்து முதல் ரெண்டு மூணு வருஷம் பாட்டிதான் என்ன பார்த்துக்கிட்டாங்க. பாட்டியை நாங்க “தோட்டத்து அம்மானு” தான் கூப்பிடுவோம். தாத்தாவை சேச்சா-னு தான் கூப்பிடுவோம். அவர்தான் எனக்கு செல்லக்குமரன் அப்படின்னு பெயர் வச்சாரு. அதை சுருக்கமா எல்லாரும் குமார்-னு கூப்பிடுவாங்க. 1 1/2 வருஷம் அவங்களோட தான் நான் இருந்திருக்கேன். அதுக்கு அப்புறம் என்ன கூட்டிட்டு போய்ட்டாங்களாம். ஆனாலும் தோட்டத்து அம்மா என்ன பாக்குறதுக்கு வாரவாரம் வந்துடுவாங்களாம்.

டிசிப்ளின்ல தோட்டத்து அம்மாவை அடிச்சுக்க ஆளே கிடையாது. அவங்க குடிச்ச பால் டம்பளரைக் கூட அவங்கதான் கழுவி வைப்பாங்க. இது எல்லாரும் பண்றது அப்படினாலும், அவங்க செய்ற நல்ல விஷயத்தை எல்லாருக்கும் சொல்லித் தருவாங்க. நாங்களும் அவங்க சொல்லித்தர விஷயத்தை செய்வோம். சேச்சா தான் திரைத்துறையில் பணியாற்றி அரசியலிலும் வெற்றி பெற்ற முதல் நடிகர். இவருடைய வீட்டில் காலையிலேயே அவ்வளவு கூட்டமா இருக்கும்.

பெரியவங்க முன்னாடி கால் மேல கால் போட்டு உட்காரக் கூடாதுன்னு சேச்சா சொல்லுவாரு. பாட்டி நல்லா செஸ் விளையாடுவாங்க. செல்ல சண்டைங்க நிறைய போடுவாங்க. “உனக்கு அரசியலும் வேணாம், சினிமாவும் வேணாம், அது நிரந்தரமா உனக்கு சோறு போடாது, படிப்பு மட்டும்தான் உன்ன இந்த உலகத்துல காப்பாத்தும். உன்னோட சொத்தை யார் வேணாலும் பறிச்சிக்க முடியும், ஆனா உன்னோட கல்வியை யாராலும் பறிச்சிக்க முடியாது” அப்படின்னு அடிக்கடி சொல்லுவாங்க.

ஒருமுறை கலைஞர் வீட்டில் இருந்து கல்யாண பத்திரிக்கை ஒன்னு வந்து இருந்துச்சு. சின்ன வயசு அப்படிங்கிறதுனால அவர எப்படி கூப்பிடனும்னு தெரியல. அப்போ, “கருணாநிதி வீட்டில் இருந்து பத்திரிக்கை வந்து இருக்கு பாட்டி” அப்படின்னு சொன்னேன். பாட்டியோ, “அவரை நீ இப்படி சொன்னது சேச்சாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவாரு” அப்படின்னு சொன்னாங்க. தன்னுடைய எதிரியா இருந்தாலும் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று சொல்லுவாங்க” என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.