தமிழகத்தில் குரூப் 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் கட் ஆப் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
குரூப் 4 என அழைக்கப்படும் நான்காம் நிலை பணியிடங்களான அமைச்சுப் பணிகள், வாரியங்கள், வனப்பணி, மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி நடத்தியது.
இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 6,724 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்பட்டது. ஆனால் பணியிடங்கள் போதுமானது அல்ல என தேர்வர்கள் அதிருப்தியை தெரிவித்ததால் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இன்று 2,208 இடங்கள் புதிதாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனால் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரித்துள்ளது. எனவே காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் தேவையான கட் ஆப் மதிப்பெண்களும் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த தேர்வில் நேர்காணல் இல்லை.வெறும் எழுத்துத் தேர்வை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இதனால் இந்த தேர்வை எழுதுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசு தேர்வுக்காக தயாராக வேண்டும் என நினைக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு நுழைவாக உள்ளது.
இதில் சேர்ந்த பின்னர் அரசு சார்ந்த தேர்வுகள் எழுதி மேற்பதவிகளுக்கும் செல்லலாம்.